இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றியைப் பெற்றது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கியுள்ளன. நேற்றைய போட்டியில் பலம் மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக கோலி அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
இந்த போட்டியில் கடைசி வரை பரபரப்பாக சென்ற நிலையில் இறுதி ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கைக்கு வந்த மிக எளிமையான கேட்ச் ஒன்றை தவறவிட்டார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரோஹித் ஷர்மா கடுப்பாகினார். இவ்வளவு கோபத்தோடு ரோஹித் ஷர்மா இதுவரை களத்தில் செயல்பட்டதில்லை. அந்த கேட்ச்சை அர்ஷ்தீப் பிடித்திருந்தால் ஒருவேளை போட்டியின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக கூட இருந்திருக்கலாம்.