போர் சூழல் காரணமாக ஐபிஎல் தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதை அரபு அமீரகத்தில் நடத்த இந்தியாவும், பாகிஸ்தானும் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் டி 20 போட்டிகள் நடந்து வருவது போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 போட்டிகள் நடந்து வந்தன. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போரால் இரு நாடுகளிலும் ஐபிஎல், பிஎஸ்எல் டி20 போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டன.
இந்நிலையில் பிஎஸ்எல் போட்டிகளை அரபு அமீரகத்தில் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்காக அரபு அமிரக கிரிக்கெட் வாரியத்திற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
அதேசமயம் இந்திய ஐபிஎல் போட்டிகளை அரபு அமீரகத்தில் நடத்தலாமா என பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே கொரோனா காலத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் அரபு அமீரகத்தில் நடந்தது. சமீபத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்தியாவின் போட்டிகள் அமீரகத்திலேயே நடந்தன. இந்த நல்லுறவு காரணமாக அரபு அமீரகம் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரு நாடுகளிடையே போர் நிலவி வருவதால் இரு போட்டிகளையும் அரபு அமீரகத்தில் அனுமதிப்பதில் பிரச்சினை உள்ளதால் எந்த நாட்டு டி20 தொடருக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ இன்னமும் அரபு அமீரகத்தில் போட்டி நடத்துவது குறித்த முடிவுகளை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K