திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார்.
அதே போல ஐபிஎல் போட்டிகளிலும் பிரித்வி ஷா சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவருகிறார். அது மட்டுமில்லாமல் உடல் எடைப் பெருகி அவர் சுணக்கமாகக் காணப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் இந்தமுறை ஏலத்தில் அவர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.
இதுபற்றி பேசியுள்ள டெல்லிக் கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசும்போது “பிரித்வி ஷா மிக வேகமாக வளர்ந்து வந்தார். அவரிடம் அனைவரும் நீதான் அடுத்த சச்சின், லாரா, கோலி என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட மனநிலையில்தான் அவர் அப்போது இருந்தார். இப்போது அவரிடம் எதுவும் இல்லை.
அவர் இனிமேல் கடுமையாக உழைத்து திரும்பி வர வேண்டும். அவர் கிரிக்கெட் மீது காதல் கொண்டு விளையாட வேண்டும். அவர் தன்னுடைய உடல் தகுதியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எங்கு தவறு நடந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.