இதுவரை கோப்பையே வெல்லாத அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி. ஆனால் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதற்கு அந்த அணியில் இணைந்துள்ள இளம் வீரர்களும், புதிதாகக் கேப்டன் பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயரும் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இளம் வீரர் பிரயான்ஷ் ஆர்யாவின் அபார சதத்தால் பஞ்சாப் அணி 219ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே சேர்த்து தோற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி பேட் செய்த போது ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் பிரயான்ஷ் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் அதிரடி சதம் கண்டார். குறைந்த பந்துகளில் ஐபிஎல் தொடரில் சதமடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய இவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி கவனம் பெற்றவர். அவரின் அந்த இன்னிங்ஸ்தான் ஐபிஎல் தொடரில் அவரை ஏலத்தில் எடுக்கக் காரணமாக அமைந்தது என சொல்லலாம்.