இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதனால் இந்திய அணிக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மூத்த வீரர் கோலி ஆகியோர் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட கேப்டன் பும்ராவின் உழைப்பெல்லாம் வீணாகப் போனது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதே நேரம் 10 ஆண்டுகள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸியை வெல்ல வைத்த பேட் கம்மின்ஸுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ் “பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் எனக்குப் பிடித்தமான தொடர்களில் ஒன்று. அதை வென்றதில் மகிழ்ச்சி. பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி. அவர்கள் கடுமையாக சண்டையிட்டு தொடரை பரபரப்பாகக் கொண்டு சென்றார்கள்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கு எதிராக WTC இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆகியவற்றை ஆஸி அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.