சமீப காலமாக ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வரும் ரஹானே இனிதான் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளதாக இந்திய முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் உள்ள பிரபலமான வீரர்களில் ஒருவர் அஜிங்கிய ரஹானே. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த ரஹானே பின்னர் சுமாராக விளையாடி வந்ததால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தாலும் சொல்லும்படியான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இறங்கி அடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஹானே. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஹானே மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்திலேயே வைத்து துவம்சம் செய்த சம்பவம் “நம்ம ரஹானேவா இது?” என பலரையும் வாய்பிளக்க செய்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியிலும் அஜிங்கிய ரஹானே தேர்வாகியுள்ளார்.
அஜிங்கிய ரஹானேவின் திறமை குறித்து பேசிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீராங்கனையுமான மித்தாலி ராஜ் “ரஹானே அவரது ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதே இந்த மாற்றத்திற்கு காரணம். ரஹானே இப்போது புதுப்பொலிவுடன் இருக்கிறார். ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொள்ளும் விதத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மித்தாலி ராஜ் மட்டுமல்ல சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்ட பல கிரிக்கெட் மேதைகளும் கூட ரஹானேவின் இந்த பேக் டூ ஃபார்ம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.