உலகளவில் அதிக வருமானம் தரக்கூடிய கிரிக்கெட் லீக் தொடர்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதலிடம் வகிக்கின்றது. இந்த தொடருக்காக கிட்டத்தட்ட 2 மாதங்கள் எந்தநாட்டு கிரிக்கெட் வாரியமும் சர்வதேச தொடர்களை அதிகமாக வைத்துக் கொள்வதில்லை.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இம்பேக்ட் ப்ளேயர் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.
இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கும் பொருந்தும். இதனால் கடந்த சீசனில் ஆல்ரவுண்டர்களுக்கான பங்களிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு புதிய விதி அறிமுகமாகவுள்ளது. அதன்படி ஒரு பவுலர் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச முடியும். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இந்த புதிய விதிமுறை இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் இப்போதே குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர்.