லக்னோ – ஆர்சிபி போட்டியில் ஏற்பட்ட மோதலில் விராட் கோலியை முறைத்துக் கொண்டது தவறு என உணர்ந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக லக்னோ அணிக்கும், ஆர்சிபி அணிக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் லக்னோவை ஆர்சிபி அணி வென்றது. ஆனால் மைதானத்தில் ஆர்சிபி வீரர் விராட் கோலியின் அக்ரசிவ் செயல்பாடுகளை பொறுக்க முடியாமல் லக்னோ அணியை சேர்ந்த கௌதம் கம்பீர், கோலியுடன் வாக்குவாதத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோலி கை கொடுக்க வந்தபோது லக்னோ அணியில் உள்ள ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் அவரது கையை தட்டிவிட்டு வம்பு செய்தது கோலி ரசிகர்கள் பலரை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால் நவீன் உல் ஹக்கை தாக்கி சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட தொடங்கினர்.
கோலியுடனான மோதலில் தனக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதை அறிந்த நவீன் உல் ஹக் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். அதில் அவர் “நான் தவறு செய்துவிட்டேன் என எனக்கு தெரியும். விராட் கோலியை போல ஒரு சிறந்த வீரருடன் பிரச்சினைக்குரிய விதத்தில் நான் நடந்து கொண்டது தவறு. அதற்காக நான் ரசிகர்களிடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.