நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் மிட்செல் ஸ்டார்க்தான் என்பது கிரிக்கெட் ஜாம்பவான்களும், ரசிகர்களுமே ஒத்துக் கொண்ட ஒன்று.
இந்த சீசனில் டெல்லியின் ஆகச்சிறந்த பலமாக இருக்கிறார் மிட்செல் ஸ்டார்க். கடப்பாறை பேட்டிங் லைன் அப் கொண்ட சன்ரைசர்ஸை தொடவே முடியாது என நினைத்தபோது சரமாரியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அல்லையில் போட்டார் ஸ்டார்க். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது, ஆபத்பாந்தவனாக இறங்கிய ஸ்டார்க் அவர்களை அடிக்க விடாமல் மடக்கி சூப்பர் ஓவருக்கு இழுத்துச் சென்றார்.
அங்கு வைத்து ரன்களை அதிகம் எடுக்கவிடாமல் குறுக்கி 12 ரன்களுக்குள் ஆட்டத்தை முடித்தார். டெல்லி அணியின் வெற்றிக்கு ஸ்டார்க் முக்கிய காரணம் என்பதால் நேற்று Player of the match ஸ்டார்க்குக்கு தரப்பட்டது. ஸ்டார்க் குறித்து டெல்லி பயிற்சியாளர் ஹேமங் பதானி பேசியபோது, டெல்லி போன்ற அணி கோப்பை வெல்ல வேண்டுமானால் அசாதாரணமான பவுலர் தேவை, எங்களிடம் ஸ்டார்க் இருக்கிறார் என பெருமையாக சொன்னார். அதை சாதித்து காட்டியுள்ளார் ஸ்டார்க்
வெற்றிக்கு பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல் “20வது ஓவர் மற்றும் சூப்பர் ஓவரில் மட்டும் கிட்டத்தட்ட 12 யாக்கர்களை வீசினார் ஸ்டார்க். அதனால்தான் அவர் ஆஸ்திரேலிய லெஜண்டாக உள்ளார்” என புகழ்ந்துள்ளார்.
எதிரணியான ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியபோது “இந்த உலகத்தில் உள்ள சிறந்த நபர்களில் அவர் முக்கியமானவர். நான் அதை ஸ்டார்சிக்குக் கொடுக்க விரும்புகிறேன். அவர் 20வது ஓவரிலேயே போட்டியை வென்றுவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
இயான் பிஷப் பேசும்போது “ஸ்டார்க்கின் மிகச்சிறந்த ஆட்டத்தை இந்த இரவில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K