இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி கலக்கி வருகிறார் லக்னோ அணிக்காக விளையாடும் மயங்க் யாதவ். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் மூன்று விக்கெட்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மணிக்கு 156 கி.மீ வேகத்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.
வழக்கமாக வேகமாக பந்துவீசும் பவுலர்களிடம் கட்டுப்பாடு இருக்காது. அதிகமாக வைட், நோ பால் வீசுவது, ரன்களை வாரி வழங்குவது போன்ற சில குறைகள் இருக்கும். ஆனால் மயங்க் யாதவ் கட்டுக்கோப்பாகவும் பேட்ஸ்மேன்களின் வீக்னெஸ் சோன்களில் சரியாக பந்துவீசி வருகிறார். இவரை பற்றி ஷிகார் தவான் மற்றும் பாஃப் டு பிளசிஸ் ஆகியவர்கள் சிறப்பாக பேசியுள்ளது அவரின் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய அணிக்காக ஆடுவதே எனது இலக்கு என மயங்க் யாதவ் கூறியுள்ளார். 22 வயதாகும் டெல்லி வீரரான மயங்க் யாதவ் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்ட அவர் தொடர்ந்து விளையாட முடியாமலும் வாய்ப்புகளைக் கவர முடியாமலும் கஷ்டப்பட்டுள்ளார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் இந்திய அணியின் எதிர்கால பவுலர்களில் ஒருவராக இருப்பார் என்பது சந்தேகமே இல்லை என்பது அவரின் துல்லியத் தாக்குதலில் தெரிகிறது.