கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் பல முக்கியமானத் தொடர்களை இழந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அவர் பல மாதங்கள் தங்கி பயிற்சி எடுத்தார்.
அதையடுத்து அவர் உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வழிநடத்தும் பொறுப்பில் அவர் இருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பாலாஜி ஷமி குறித்து பேசும்போது “2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் இந்திய அணியில் பும்ராவை விட சிறப்பாக செயல்பட்டவர் ஷமி. பும்ரா ஒரு சாம்பியன் பவுலர். ஆனால் அவர் வருவதற்கு முன்பு இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டை தூக்கி சுமந்தவர் ஷமி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா நன்றாக செயல்பட வேண்டுமென்றால் ஷமி நன்றாக வந்து பந்துவீச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.