ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பாக கோலி, பிருத்வி ஷா மற்றும் ரவிந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 468 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ அனை ஏற்று தற்போது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடி வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் சுழற்பந்து வீச்சில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்கு வரிசையாக அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பவல் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 83 ரன்கள் சேர்த்து அவுட்டாஅனார்.
அந்த அணி 38 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளது. சிறப்பாக பந்து வீசி வரும் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.