ஐபிஎல் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்த சீசனுக்கான மெஹா ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடந்தது. அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக சில வீரர்கள் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதில் ஒருவர்தான் ரசிகர்களால் கேன் மாமா என அன்போடு அழைக்கப்படும் நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன். அதற்கு முந்தைய சீசனில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார்.
அவரின் நிதானமான ஆட்டம் ஐபிஎல் போன்ற பரபரப்பு மிகுந்த அதிரடித் தொடருக்கு ஒத்து வராது என்பதால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் வில்லியம்சன் வர்ணையாளராகக் களமிறங்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.