இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணியும் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து எந்த அணியும் முன்னிலை பெறாத நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் ஆக்ரோஷத்துக்கு அடங்கினர். 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்கான இந்த இலக்கை துரத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. நான்காம் நாள் ஆட்டமுடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. கே எல் ராகுல் 33 ரன்களோடு களத்தில் நிற்கிறார். நேற்றைய ஆட்டத்தின் இறுதி நேரத்தில் கேப்டன் ஷுப்மன் கில் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அதனால் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் இறக்கப்பட்டார்.
இதுபோல நைட் வாட்ச்மேனாக இறக்கப்படுபவர்கள் அன்றைய நாளை விக்கெட் எதுவும் இல்லாமல் கடத்த அனுப்பப்படுவார்கள். அப்போது களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் அவர்களைக் குறைவாக பந்துகளை எதிர்கொள்ள செய்து பொறுப்பைத் தான் ஏற்று விளையாடுவார்கள். ஆனால் நேற்று ராகுல் சிங்கிள்கள் எடுத்து ஆகாஷ் தீப்பிடம் அதிக பந்துகளைக் கொடுத்தார். இதனால் 11 பந்துகளில் 1 ரன்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்துல் அவுட் ஆகி வெளியேறினார் ஆகாஷ். இதனால் கே எல் ராகுல் செய்தது தவறு என்று ரசிகர்கள் விமர்சிக்க, மற்றொரு சாரார் இந்த இன்னிங்ஸில் நமக்கு இப்போது கே எல் ராகுலின் விக்கெட்தான் முக்கியம், அதனால் அவர் ஆகாஷ் தீப்பிடம் பந்துகளை விட்டது சரியானதுதான் எனவும் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.