இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் ஜெய்ஸ்வால் சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார் .
டெஸ்ட் போட்டிகளில் அவரின் மிகச்சிறந்த ஆட்டங்களால் வர்ணனையாளர்கள் அவரை நியு கிங் என புகழ்த் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. விரைவில் அவர் ஒரு நாள் போட்டிகளிலும் தனக்கான இடத்தை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் அந்த அணியின் கேப்டன் ரஹானே உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்போது கோவா அணிக்கு மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. உள்ளூர் போட்டி ஒன்றில் ரஹானே, ஜெய்ஸ்வாலின் அத்துமீறிய செயலுக்காக அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கோவா அணியில் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.