Publish Date: Sat, 18 Jan 2025 (14:59 IST)
Updated Date: Sat, 18 Jan 2025 (15:02 IST)
பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இதனால் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில் நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.
இந்த தொடருக்காக அனைத்து நாட்டு வாரியங்களும் தங்கள் அணியை அறிவித்து விட்டன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டிருந்த நிலையில் இன்னும் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கவில்லை. இந்த தாமதத்தால் அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.