இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தால் 587 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பாக சிறப்பாக வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 180 ரன்கள் முன்னிலையோடு தொடங்கிய இந்தியா ஷுப்மன் கில்லின் அதிரடி சதத்தின் மூலம் 427 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது.
இப்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் நிலையில் இந்தியா வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணி 1014 ரன்கள் சேர்த்துள்ளது. இது இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றிலேயே மிக அதிக ஸ்கோராகும். இதற்கு முன்பாக 2004 ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் இந்திய அணி விளையாடிய போட்டியில் 916 ரன்கள் சேர்த்திருந்ததுதான் அதிகபட்சம்.