இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தால் 587 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி 84 ரன்களுக்கே ஐந்து விக்கெட்களை இழந்துவிட்ட போதும் ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் மீண்டெழுந்தது. ஹாரி ப்ரூக் 158 ரன்களும், ஜேமி ஸ்மித் 184 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 180 ரன்கள் முன்னிலையோடு தொடங்கிய இந்தியா ஷுப்மன் கில்லின் அதிரடி சதத்தின் மூலம் 427 ரன்கள் சேர்த்தது. ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 161 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 608 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.