இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சமீபத்தில் தன்னுடைய 71 ஆவது சதத்தை அடித்து நீண்ட கால இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார். இது குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில் கவுதம் கம்பீர் கோலி குறித்த தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில் “அவர் சதமடித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன என்பதை உணர வேண்டும். மூன்று வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். நான் அவரை விமர்சிக்கப் போவதில்லை, ஆனால் அவர் கடந்த காலங்களில் நிறைய ரன்கள் எடுத்ததால் அணியில் ஆதரவைப் பெற்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சதம் எடுக்காமல் இருந்திருந்தால் எந்த இளம் வீரரும் சர்வதேச கிரிக்கெட்டில் தப்பித்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. கடைசியில் சரியான தருணத்தில் அது நடந்துவிட்டது.” என்று அவர் மேலும் கூறினார்.