Publish Date: Mon, 22 Jul 2024 (16:20 IST)
Updated Date: Mon, 22 Jul 2024 (16:23 IST)
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இப்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். அதில் “ஷமி இப்போது பந்துவீச தொடங்கியுள்ளார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணி செப்டம்பர் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதற்குள் அவர் தயாராகிவிடுவாரா என நான் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளேன். ஆனாலும் அதுபற்றி அப்போதுதான் தெரியவரும். அதற்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.