இன்று ஐபிஎல் தொடங்கும் கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருக்க சிஎஸ்கேவில் நடந்துள்ள கேப்டன் மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசன் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த சீசன் சிஎஸ்கே ரசிகர்களுக்கும் முக்கியமான ஒரு சீசன் கூட. இந்த சீசனோடு எம் எஸ் தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறலாம் என கூறப்படுவதால் அவரது கேப்பிட்டன்சியில் சிஎஸ்கே விளையாடுவதை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல்தான் காரணம்.
ஆனால் அதற்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து எம் எஸ் தோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பதவியேற்றுள்ளார். ஐபிஎல் போட்டிகளை காண ஆர்வமாக இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இடி விழுந்தாற்போல இந்த மாற்றம் நடந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து தோனி கடந்த ஆண்டே திட்டமிட்டு விட்டதாக புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இரு என கடந்த ஆண்டே மஹி பாய் என்னிடம் சொல்லியிருந்தார். கேப்டனாக செயல்படுவது புதுமையான அனுபவம். ஆனால் என்னுடன் தோனி இருக்கிறார். ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களது அனுபவம் எனது கேப்பிடன்சியை வழிநடத்தும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.