இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதலில் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்முரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதைக் காண 3000க்கும் அதிகமான ரசிகர்கள் குழுமினர்.
ஆனால் அவர்கள் அமைதியாக பார்க்காமல், இந்திய வீரர்களைக் கிண்டல் செய்து கூச்சல் போட்டுள்ளனர். மேலும் ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் உடல் எடையைக் கிண்டல் செய்தும் பேசியுள்ளனர். இதனால் கடுப்பான இந்திய வீரர்கள் பயிற்சி முகாமை பாதியிலேயே ரத்து செய்து கிளம்பியுள்ளனர். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இனிமேல் வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு வலியுறுத்த அதை ஏற்றுக் கொண்டுள்ளது ஆஸி கிரிக்கெட் வாரியம். இனிமேல் வீரர்களின் பயிற்சி முகாமைப் பார்க்க ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.