இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.
தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் அஃப் ஃபேம்-ல் அவர் பெயர் சமீபத்தில் இடம்பெற்றது.
தோனியின் அலட்டல் இல்லாத கேப்டன்சியைப் பார்த்து ரசிகர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை கேப்டன் கூல் என அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பெயருக்கு தற்போது தோனி ட்ரேட் மார்க் விண்ணப்பித்துள்ளார். இதன் மூலம் இந்த பெயரை வணிக நிறுவனங்கள் தோனியின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது.