இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், போட்டியை ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்து கோட்டை விடுகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளது.
இந்திய அணி தோற்ற இரு போட்டிகளிலும் நூலிழையில்தான் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. அதனால் தவறுகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பல திசைகளில் இருந்தும் கருத்துகள் வரத் தொடங்கியுள்ளன. அதில் இந்திய அணி வீரர் அஜிங்யே ரஹானே தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் “இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர், ஆல்ரவுண்டர்கள் மேல் அதிக பாசம் வைத்திருப்பதை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த தொடருக்கு வாஷிங்டன் சுந்தர், நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் ஜடேஜா என மூன்று ஆல்ரவுண்டர்கள் தேவையில்லை. அவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு குல்தீப் யாதவ்வை அணிக்குள் கொண்டு வரவேண்டும். அவரின் தேவை இந்த தொடருக்கு மிக அதிகமாக உள்ளது” எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரையிலான மூன்று போட்டிகளிலும் குல்தீப் யாதவ் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.