உலகக் கோப்பை வென்று இந்தியாவுக்கு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் வெகு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் வந்த பேருந்தை முன்னாலும் பின்னாலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சுழுந்து ஆரவார வரவேற்பைக் கொடுத்தனர்.
அதன் பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவைக் காணவும் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். ஒரு கிரிக்கெட் போட்டி நடந்தால் எவ்வளவு கூட்டம் வருமோ அதைவிட அதிகமாக ரசிகர் கூட்டம் வான்கடே மைதானத்தில் அலைமோதியது.
இந்நிலையில் பால்தாக்கரேவின் பேரனும், மகாராஷ்டிராவின் மந்திரியுமான ஆதித்யா தாக்கரே இந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார். அதில் “அமித் ஷாவின் ஆசைக்காக இறுதிப் போட்டிகளை மும்பையில் இருந்து குஜராத்துக்கு மாற்றாதீர்கள். நேற்று மைதானத்தில் கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள் சொன்ன செய்தி அதுதான். ” எனப் பேசியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படாமல் குஜராத்துக்கு மாற்றப்பட்டது அப்போதே விமர்சனங்களைப் பெற்றது.