நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இதனால் 140 கோடி இந்திய மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அமைந்தது.
இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக்கியதும் ரசிகர்களுக்கு அவர் மேல் கோபம் வர காரணமாக அமைந்தது.
அதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஆனால் உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே அவரின் ஆட்டம் சீராகி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பினார். இறுதிப் போட்டியில் அவர் பவுலிங்கில் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் அவர் சுமார் 200 ரன்களும் 15 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவர் ஐசிசி தரவரிசைகளுக்கான பட்டியலில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசும்போது “ஐபிஎல் தொடரின் போது ஹர்திக்கைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். கொஞ்சம் அதிகமாகவே நான் விமர்சித்தேன். அப்போது அவர் பல தவறான முடிவுகளை எடுத்தார். ஆனால் உலகக் கோப்பையில் அவர் சரியான பாதைக்கு திரும்பி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.” என பேசியுள்ளார்.