இந்தி திரையுலகின் முக்கியமான இயக்குனராக அறியப்படும் விகாஸ் பாஹ்ல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. அதையடுத்து அவர் தற்போது தனது பட வாய்ப்புகளை இழந்து வருகிறார்.
விகாஸ் பாஹ்ல், குயின் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனமான பேந்தம் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவர்.
விகாஸ் பாஹ்ல், அனுராக் காஷ்யப் இயக்கிய பாம்பே வெல்வெட் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். ஆனால் அது அப்போது பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னால பாலிவுட்டின் பிரபல கதாநாயகி கங்கனா ரனாவத் இந்த புகார் உண்மையாக இருக்கலாம் எனத் தெரிவித்ததை அடுத்து விஸ்வரூபம் எடுத்தது.
மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில் ’குயின் படப்பிடிப்பின் போது, என்னிடமும் அவர் இதுபோல பலமுறை நடந்துள்ளார். ’படப்பிடிப்பில் பலமுறை என்னைக் கட்டிபிடிப்பார். மேலும் உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது என கூறுவார்’. எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் மறுபடியும் லைம்லைட்டுக்கு வந்தது. இதையடுத்து பேந்தம் பிலிம்ஸின் பங்குதாரர்களான அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோத்வானி இச்சம்பவம் குறித்து மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் தங்களுக்காக விகாஸ் பாஹ்ல் இயக்கவிருந்த தொடரிலிருந்து அவரை நீக்கியுள்ளது. மேலும் அவர் இயக்கியுள்ள சூப்பர் 30 என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அவரைத் தவிர்த்து வருகின்றனர் படக்குழுவினர். பாலிவுட்டில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்ததை அடுத்து திரையுலகில் பாலியல் தொல்லை குறித்த சர்ச்சைகள் அதிமாகப் பேசப்படு வருகின்றன.