Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்

Advertiesment
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்
, சனி, 14 ஜூலை 2018 (13:53 IST)
புதிய வகை ஜீப்ரா மீன்கள் மருத்துவ ஆய்வாளர்களை பெரும் சிக்கலில் இருந்து மீட்டுள்ளன. இவ்வகை மீன்கள் உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன. பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் போது முதலில் அவற்றை மருத்துவ நிபுணர்கள் விலங்குகளின் உடலில் பரிசோதித்து பார்ப்பது வழக்கம். ஆனால் இவற்றில் பல கடினமான நடைமுறைகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இந்நிலையில் ஜீப்ரா மீன்களின் கண், மூளை, சிறுநீரகம், ரத்தம் போன்றவை மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள உகந்ததாக உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியன் ஜீப்ரா மீன் ஆய்வாளர்கள் கூட்டம் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. செல்லுலர் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துடன் (சிசிஎம்பி) இணைந்து நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இத்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நோய் மனித உடலை தாக்கும்போது அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஜீப்ரா மீனில் செய்யப்படும் சோதனைகளை வைத்து எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என பிபிசியிடம் கூறினர் சிசிஎம்பி-ஐ சேர்ந்த மருத்துவ அறிவியலாளர்கள். மரபணு மற்றும் மருத்துவ சோதனைகளை செய்ய ஜீப்ரா மீன் பொருத்தமானது என்கிறார் சிசிஎம்பியின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் குமார் மிஸ்ரா.

மனித உடலிற்கு மருந்து தரும் போது எது போன்ற விளைவுகள் நிகழ்வுகள் நடக்கின்றதோ அதில் 90% நிகழ்வுகள் ஜீப்ரா மீனிடம் கொடுத்து சோதிக்கும்போதும் ஏற்படுவதாக கூறிகிறார் டாக்டர் மிஸ்ரா. இதன் காரணமாகத்தான் அந்த மீன் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஏற்றது என்கிறார் மிஸ்ரா. இந்த புது வகை மீன் குறித்து பல சுவாரசிய உண்மைகளை கூறுகின்றனர் அறிவியலாளர்கள்.

webdunia


புற்றுநோய் சோதனைகள்

மனித உடலில் புற்றுநோய் செல்கள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்து ஜீப்ரா மீனை கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. முதலில் புற்றுநோய் செல்களை இந்த மீனின் உடலில் செலுத்தி பின்னர் அதை அழிப்பதற்கான மருந்தும் செலுத்தப்படுகிறது.தற்போது மார்பக புற்றுநோய் குறித்த ஆய்வுகள் இந்த மீனை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர் சிசிஎம்பி நிபுணர்கள்.


webdunia


இச்சோதனையின் அடுத்த கட்டமாக மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய் செல்கள் இந்த மீனின் உடலில் செலுத்தி சோதிக்கப்படுகின்றன என்றார் டாக்டர் மேகா குமார். மனித உடலில் புற்றுநோய் செல்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எப்படி பரவுகிறதோ அதே போன்று ஜீப்ரா மீனிலும் பரவுவதாக கூறுகிறார் மேகா குமார்.ஆரம்ப கட்ட ஆய்வுகளை ஜீப்ரா மீனிலும் பிறகு அடுத்த கட்ட ஆய்வுகளை மனித உடலிலும் மேற்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல் நியூரோ பயாலஜி, ஜெனடிக் மியூடேஷன், எம்பிரியாலஜி, காச நோய், தொடர்பான மருத்துவ ஆய்வுகளுக்கும் இந்த மீன் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.இந்த மீனுக்கு பல்வேறு மனோ நிலைகள் உள்ளன என்றும், சில நாட்கள் அது எவ்வித உணர்வுகளையும் காட்டாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாள் முழுதும் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இது இருக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.துடிப்பாக இருக்கும் நாட்களில் அந்த மீன் சுற்றிச்சுற்றி வரும் என்றும் அப்போது மூளையில் உள்ள கட்டிகளின் தாக்கம் குறித்து தெரிந்துகொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

webdunia


ஆண் மீனுக்கு உடல் நலமில்லாமல் இருந்தால் அதை பெண் மீன் தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப ஆண் மீனுடன் சேர்ந்து மீன் முட்டையிட முடியுமா என்பதையும் பெண் மீன் அறிந்துகொள்ளும். முட்டையிட தகுதியற்ற சூழல் இருந்தால் ஆண் மீனை பெண் மீன் நெருங்கவே விடாது. மதுவை ஆண் மீனுக்கு கொடுத்தால் அந்த மீனை பெண் மீன் அண்ட விடாது என்பதும் ஆய்வுகளில் தெரிய வந்ததாக பிபிசியிடம் கூறினார் டாக்டர் மிஸ்ரா. தற்போது ஜீப்ரா மீன் குறித்து 40 ஆய்வகங்களில் சோதனை நடந்து வருகிறது.

மரபியல் விஞ்ஞானிகளுக்கு ஊக்கம்

ஜீப்ரா மீனைக் கொண்டு உடல் உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன, மரபணுக்களில் ஏற்படும் மாற்றம், வளர்ச்சி, முட்டை நிலையிலிருந்து உடல் வடிவம் பெறுவது, ஜீன் திடீர் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை அறிய முடியும்.இந்த மீனில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. இதன் உறுப்புகள் சேதம் அடைந்தால் மீண்டும் வளரும் என்பதுதான் அந்த ஆச்சரியம்.

சிக்கனமான ஆய்வுகள்

ஜீப்ரா மீன்களைக் கொண்டு ஆய்வு நடத்துவது மிகவும் சிக்கனமானது என்பது அதை ஆய்வாளர்கள் விரும்ப மற்றொரு காரணம்.மற்ற உயிரினங்களை காட்டிலும் ஜீப்ரா மீனில் ஆய்வுக்கு ஆகும் செலவு 500ல் ஒரு பங்குதான் இருக்கும். ஜீப்ராவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் நம்பகத்தனமையும் நன்றாக இருக்கும் என கூறுகிறார்கள்.

மற்ற உயிரினங்களில் மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள சில அனுமதிகள் தேவைப்படுகின்றன. பல சட்டப்பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது தவிர விலங்குகள் நல ஆர்வலர்களின் கேள்விகளையும் சமாளிக்கவேண்டியிருக்கும். அந்த விலங்குகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க தனி இடத்தில் வைத்திருக்கவேண்டும். இதோடு உணவு உள்ளிட்ட விஷயங்களையும் பார்க்க வேண்டியிருக்கும். மேலும் இது போன்ற உயிரினங்கள் அதிகளவில் கிடைப்பதும் சிரமம்.


ஜீப்ரா வகை மீன்கள் இமாலய மற்றும் கங்கை பகுதியில் அதிகளவில் கிடைப்பதும் சாதகமான அம்சம்.

இது போன்ற காரணங்களே நவீன கால மரபியல் ஆய்வாளர்கள் ஜீப்ரா மீனை தேர்வு செய்ய காரணம் என்கின்றனர் சிசிஎம்பி அமைப்பினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேடப்பட்ட குற்றவாளியை தேடிப்பிடித்து போட்டுத்தள்ளிய போலீஸ்