Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யமால்: மெஸ்ஸியின் கையில் தவழ்ந்த குழந்தை, 16 ஆண்டுக்குப் பிறகு கால்பந்து உலகை வியக்கவைக்கும் பின்னணி

Prasanth Karthick
வியாழன், 11 ஜூலை 2024 (13:20 IST)
ஒவ்வொரு முறையும், காலத்திற்கும் நினைவில் நிற்கும் வகையில், யூரோ கால்பந்து தொடரில் ஒரு கோல் அடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு அந்த ஒரு கோல் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்படும், விவாதிக்கப்படும். அந்தக் காணொளி பலமுறை பகிரப்படும்.



1988 யூரோ போட்டிகளில் மார்கோ வான் பாஸ்டனின் பறந்து வளைந்த ('Angled volley') கோல், யூரோ 1996இல் பால் கேஸ்கோயின் சிறப்பான ஆட்டம் மற்றும் போட்டியை அவர் முடித்த விதம், அதே போட்டியில் கரேல் போபோர்ஸ்கியின் கோல் போன்றவையும் இத்தகைய தருணங்களில் அடங்கும்.

யூரோ 2024-இன் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக, பிரான்ஸுக்கு எதிராக லமைன் யமால் அடித்த கோலும் இந்த காலத்திற்கும் நினைவில் நிற்கும் கோல்களின் பட்டியலில் சேர்க்கப்படலாம்.

ஸ்பெயின் 1-0 என பின்தங்கிய நிலையில், யமால் அடித்த ஒரு அற்புதமான கோல் அவரை கால்பந்தின் வரலாற்று புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. ஸ்பெயின் அணி பிரான்சை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு போட்டிக்குச் சென்றதன் பின்னால் ஒரு ஹீரோவாக எழுச்சி பெற்றுள்ளார் யமால்.

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, 2007ஆம் ஆண்டு பார்சிலோனாவில், ஒரு தொண்டு நிறுவனத்தின் காலண்டர் போட்டோஷூட்டிற்காக ஒரு குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அந்தக் குழந்தை தான் லமைன் யமால். மெஸ்ஸியுடன் குழந்தையாக யமால் இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

'16 வயது ஹீரோ'

யூரோ போட்டியின் வரலாற்றில் கோல் அடித்த மிகவும் இளமையான கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 16 வயதான யமால். தனது ஆட்டத்தின் மூலம் இந்த போட்டியைப் பார்த்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

"ஒரு கால்பந்து சூப்பர் ஸ்டார் பிறந்துவிட்டார்" என்று முன்னாள் இங்கிலாந்து ஸ்ட்ரைக்கர் கேரி லினேக்கர் பிபிசியிடம் கூறினார். "இது இந்த போட்டியின் முக்கியமான தருணம், ஏன் மொத்த 2024 ஐரோப்பிய கால்பந்து தொடரில் இதை அற்புதமான தருணம் என்றே கூறலாம்" என்று கூறினார்.

"இதை நம்ப முடியவில்லை" என்று முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஆலன் ஷீரர் விவரித்தார். "நாங்கள் இந்த தொடர் முழுவதும் அவரைப் பற்றி பேசி வந்தோம். இவ்வளவு சிறிய வயதில் அபாரமான சாதனையைப் படைத்துள்ளார்" என்கிறார்.

அலையன்ஸ் அரங்கிற்குள் நேரடியாக போட்டியைப் பார்த்தவர்களுக்கும், உலகம் முழுவதும் இருந்து டிஜிட்டல் திரையில் கண்ட ரசிகர்களுக்கும் ஸ்லோ மோஷனில் அந்த கோல் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அந்த கோல் அடிக்கப்பட்ட நேரம் காரணமாக தான் அது மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது.

இந்த அரையிறுதியில் 1-0 என்ற கணக்கில் போராடிக் கொண்டிருந்தது ஸ்பெயின் அணி. ஆனால் மிகவும் பதற்றமான அந்த தருணத்தை சிரமமின்றி கையாண்டார் யமால்.

இந்த முக்கியமான போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஆடுகளத்தில் தனது அணி வீரர்களுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார் யமால். யமாலின் கோலைப் பற்றி ஸ்பெயின் அணியின் உரிமையாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே கூறுகையில், "ஒரு கால்பந்து மேதையின் பண்புகளை அவரிடம் கண்டோம்." என்றார்.

"நாங்கள் அவரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும், அவர் இதே பணிவுடன் விளையாடி, தனது கால்பந்து பயணத்தில் மேலும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உண்மையைச் சொன்னால் அவரைப் பார்க்க மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் போல் தெரிகிறது." என்று கூறினார்.



மேலும், "அவர் ஸ்பெயின் அணியில் இருப்பது எங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. நாங்கள் அவரை நம்புகிறோம், அடுத்து பல ஆண்டுகளுக்கு அவர் இதே போல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்." என்று கூறினார் ஸ்பெயின் அணியின் உரிமையாளர் லூயிஸ்.

இறுதிப்போட்டிக்கான கனவு

ஆட்டத்திற்குப் பிறகு நள்ளிரவு 12.15 மணிக்கு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் யமால் இருந்தார்.

"தேசிய அணிக்காக இறுதிப் போட்டியில் ஆட வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது" என்று கூறினார் யமால்.

ஆடுகளத்தில் தான் கொண்டிருந்த அதே தன்னம்பிக்கையுடன் செய்தியாளர் சந்திப்பில் கூடியிருந்த ஊடகங்களை எதிர்கொண்டார் யமால். இப்போது அவரது கவனம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்லினில் நடைபெறும் இறுதிப் போட்டியின் மீது உள்ளது.

எந்த அணியை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் உண்மையில் அதை பற்றி கவலைப்படவில்லை. இறுதிப் போட்டி என்று வரும்போது சிறப்பாக விளையாட வேண்டும். எந்த அணியாக இருந்தாலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்." என்று கூறினார் யமால்.

மெஸ்ஸியுடனான புகைப்படம்

சில நாட்களுக்கு முன்பாக யமாலின் தந்தை, "இரு கால்பந்து ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற வாசகத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2007இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.

அந்தப் புகைப்படத்தில் மெஸ்ஸி, குழந்தை யமாலைக் கைகளில் ஏந்திக் கொண்டிருந்தார்.
அப்போது 20 வயதான மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் கால்பந்து வீரராக இருந்தார். யுனிசெஃப் (Unicef) காலண்டருக்காக வீரர்கள் குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். ஜோவான் மான்ஃபோர்ட் எனும் புகைப்பட நிபுணர் எடுத்த புகைப்படம் அது.

"மெஸ்ஸி அப்போது மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். குழந்தையை எப்படி ஏந்த வேண்டும் என்று கூட அவருக்கு அப்போது தெரியவில்லை." என்கிறார் ஜோவான் மான்ஃபோர்ட்.

மெஸ்ஸியைப் போலவே யமாலும் பார்சிலோனாவுக்காக விளையாடத் தொடங்கினார், அங்கு அவர் கிளப்பின் இளம் தொடக்க வீரராக இருந்தார்.

சில நாட்களுக்கு முன் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கிய போது தான் அந்தப் புகைப்படத்தில் குழந்தையாக இருப்பது யமால் என்பதை தான் உணர்ந்ததாக மான்ஃபோர்ட் கூறினார்.

"இதுபோன்ற வைரலான ஒரு புகைப்படத்தை நான் எடுத்துள்ளேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், இது மிகவும் இனிமையான ஒரு உணர்வு." என்று கூறுகிறார் ஜோவான் மான்ஃபோர்ட்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments