Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட் போராட்டம்; உந்து சக்தியான பெண்களின் பங்களிப்பு

Advertiesment
ஸ்டெர்லைட் போராட்டம்; உந்து சக்தியான பெண்களின் பங்களிப்பு
, புதன், 30 மே 2018 (12:58 IST)
மே 22. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்காக மக்கள் தயாராக இருந்தார்கள். அந்த செய்தியை நேரலையாகத் தருவதற்காக சென்னையிலிருந்து அங்கு சென்றிருந்தோம். போராட்டம் தொடங்கும் பனிமய மாதா கோயிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் நாம் பயணித்தபோது, இந்தப் போராட்டம் மக்களின் உணர்ச்சிப் பிழம்பாக பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
 
அரசியல், சமூக பிரச்சனைகளுக்காக தமிழகத்தில் நடந்துவரும் எண்ணற்ற போரட்டங்களில் ஒன்றாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்திருந்தாலும், மே 22 அன்று ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும், சில தாய்மார்கள் கைக்குழந்தைளுடனும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கோஷமிட்டபடி வந்தனர்.
 
இத்தனை ஆயிரம் பெண்கள் எப்படி போராட வந்தார்கள்? போரட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கதை. ''காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா?'' என்ற கோஷத்தை பல பெண்களும் முழங்கினார்கள். அவர்கள் மனதில் இருக்கும் வலி அதில் எதிரொலித்தது.
 
ஒரு நாளைக்கு ஏழு மாத்திரை
 
ஸ்டெர்லைட் ஆலையால்தான் பலருக்கும் புற்றுநோய் வந்துள்ளது, கருவில் இருக்கும் குழந்தைக்கும் வர வாய்ப்புள்ளது என திடமாக நம்புவதாக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பல பெண்கள் தெரிவித்தனர்.
 
ஒரு சதுரவடிவப் பெட்டி முழுவதும் மாத்திரை, மருந்துடன் நம்மிடம் பேச வந்தார் 57 வயது லட்சுமி. ''இதெல்லாம் என் வீட்டுக்காரருக்கு கொடுக்கவேண்டிய மருந்துகள். தினமும் ஏழு மாத்திரைகள் அவருக்கு கொடுக்கனும். மூச்சு திணறல்னு ஆஸ்பத்திரி போனோம். கொஞ்சம் கொஞ்சமா மாத்திரைகளை அதிகப்படுத்தி, கடந்த மாதம் முதல் ஏழு விதமான மாதிரிகளை சாப்பிட சொன்னாங்க. எங்க போறதுக்கும் பயமா இருக்குது. வீட்டிலயே இருந்துட வேண்டியதுதான்,'' என்கிறார், ஸ்டெர்லைட் ஆலைக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த லட்சுமி.
 
சொந்தங்களை இழந்த பெண்கள்
 
நாற்பது வயது செல்வமணியின் வீட்டில் இரண்டு இழப்புகள். ஆறாத ரணங்கள் கொண்ட மனுஷியாக பேசுகிறார் அவர். ''நான் போரட்டத்திற்கு போனேன். உண்மைதான். யாரும் சாகறதுக்கு போகல. போன்ல(சமூக வலைதளங்கள்) வந்த செய்தியைப் பாத்தப்போ, எங்க வீட்டில நடந்தது எல்லாருக்கும் நடந்திருக்குனு தெரிஞ்சுது. என்னோட மாமிக்கு பிறப்புறுப்பில் புற்றுநோய். அருவது வயசுல..அந்த அம்மா பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்மா. ஒவ்வொரு நாளும் நாலு, அஞ்சு சேல மாத்தனும். கொஞ்ச நேரத்தில சேலை பூரா ரத்தம், ஒரு விதமான நாத்தத்துடன் தண்ணியா போகும்..கடைசி நாட்கள்ல துணி இல்லாம வெறும் போர்வையை போத்தி படுக்கவச்சிருந்தேன்.. நான் மட்டும்தான் பாத்துகிட்டேன். சொந்தகாரங்க யாருமே பாக்கவரல,'' என்று கூறிவிட்டு வெடித்து அழுதுவிட்டார் செல்வமணி.
 
அவரது அண்டைவீட்டு தோழிகள் அவரை சமாதானப்படுத்திவிட்டு நம்மிடம் பேசினார், ''செல்வியோட தம்பி மூச்சுதிணறல்ல இறந்துபோனாரு..அடுத்த இரண்டு வருசத்துல மாமியும் செத்துட்டாங்க.. இதெல்லாம் அவளுக்கு ரொம்ப வேதனைய தந்துடுச்சு. எங்க ஊர் மக்க மருந்துக்கு செஞ்ச செலவ சேத்தி பங்களா கட்டலாம் போல,'' என்றார் சக்தி.
 
''கண்ணில் புற்றுநோய்''
 
மக்கள் பேரணியாக திரண்டு வந்த பல கிராமங்களிலும், மே 22க்கு முந்தையநாள் இறந்துபோன தங்கதுரை என்பவரின் இழப்புக்கு வருந்தி, 'கண்ணில் கேன்சர்' என்ற வாசகத்தோடு வெளியான போஸ்டர் பல இடங்களிலும் காணக்கிடைத்தது.
 
''பாத்தீகளா? தங்கதுரை எங்க ஊரு. தாமோதரன் நகர். செத்துட்டான். கண்ணில் கேன்சர். எங்க கண் முன்னாடியே வாலிப புள்ளைக மொத்தமும் செத்துபோனா என்ன செய்ய?,'' என வருத்ததுடன் நம்மிடம் பேசிவிட்டு பெயர் சொல்லக்கூட நிற்காமல் போராட்டத்தில் கோஷமிட்டபடி நடந்தார் சுமார் ஐம்பது வயது பெண்மணி. டும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள் போன்றோரின் மரணங்கள் ஏற்படுத்திய வலியே இந்த பெண்களை போரட்டத்திற்கு வரவைத்தது என்கிறார் ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சரோஜா.
 
''ஸ்டெர்லைட் ஆலையால்தான் கேன்சர் வந்தது என்ற செய்தியை மக்கள் நம்புகிறார்கள். இத்தனை ஆண்டுகாலமாக மக்களிடம் இந்த தாக்கம் இருக்கிறது என்பது இங்குள்ள அரசுக்குத் தெரியும். இது உண்மைதான் அல்லது இது வதந்தி என்று எந்த முடிவையும் அரசு தெரிவிக்கவில்லை. மருத்துவ ஆய்வு எதுவும் நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. உண்மை நிலையை அரசு சொல்லவில்லை. குடும்பமே தங்களது உலகம் என்று எண்ணிய பல பெண்கள், இனியும் மரணங்கள் தொடரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் போராட வந்தனர்,'' என்கிறார்.
 
புற்றுநோய் - வதந்தியா? உண்மையா?
 
சில நபர்களுக்கு புற்றுநோய் இருந்ததை முற்றிய நிலையில் மருத்துவர்கள் தெரிவித்த சம்பவங்கள் நடந்துள்ளன என்கிறார் அவர். ''மருத்துவர்களை நம்பக்கூடாது என்ற எண்ணத்திற்கு மக்களை அரசு தள்ளிவிட்டது. 2013ல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையால் பல நபர்கள் மயங்கி விழுந்தனர். அதைப் பார்த்த பலருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்கள் பசுமரத்தானியாக மனதில் பதிந்துவிட்டதால், போராட்டம் ஒன்றுதான் தீர்வு என்று எண்ணி பெண்கள் போராட வந்தனர்,'' என்கிறார் சரோஜா.
 
பெண்களை பற்றிக்கொண்ட அச்சம்
 
அமைதிப் போராட்டம் என்ற நம்பிக்கையால்தான் பெண்கள், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போரட்டத்திற்கு வந்தனர் என்கிறார் வழக்கறிஞர் பா.பா. மோகன்.
 
''ஊர் கூடி வந்தால்தான் நியாயம் கிடைக்கும் என்று நம்பிய பெண்கள் ஒன்று சேர்ந்தார்கள். பக்கது வீடு, எதிர் வீடு, தெரிந்த நண்பர்கள், உறவுகள் என எல்லோரும் ஒன்றுசேர்ந்து போவதால், பாதுகாப்பாக வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கூட்டம் கூட்டாமாக பெண்கள் வந்தார்கள். சமூக மாற்றம் சாத்தியமாக பெண்களும் பங்கேற்கவேண்டும் என்று வந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டது. ஆனால் இதுபோன்ற போரட்டங்களுக்கு பெண்கள் வந்தால், காவல்துறை அவர்களிடம் விசாரணை செய்யாது, துப்பாகியால்தான் பேசும் என்ற பயத்தில் அவர்கள் இருகிறார்கள்,'' என்று மோகன் குறிப்பிட்டார்.
 
மேலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலரும் தங்களது மகன்களை காவல்துறையினர் எந்த அறிவிப்பும் இல்லாமல் கூட்டிச்சென்றுவிட்டார்கள் என்று அழுகுரலுடன் நிற்கிறார்கள் என்கிறார் மோகன். ஒன்றுபட வேண்டும் என்ற உந்துதல்தான் இந்தப் போராட்டத்தில் பல பெண்களைத் திரட்டியதாகவும், அதுதான் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் அந்த மக்கள் நம்புகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகைப் பழக்கத்தை கைவிட விரும்பும் 'உலகின் மிக வயதான நபர்'