ஆப்ரிக்க நாடான மாலியில் 25 வயதுப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 5 பெண், 4 ஆண் குழந்தைகள்.
மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரிந்த எண்ணிக்கையை விட இரண்டு அதிகம். ஹலிமா சிஸிக்கு குழந்தைகள் பிறந்தது மொரோக்கா நாட்டில். தகவல் அறிந்த மாலி நாட்டு அரசு அங்கு அதிகாரிகளை அனுப்பி தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று அவரது கணவர் பிபிசியிடம் தெரிவித்தார். "எனது மனைவியும் குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள்".
அமெரிக்காவில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு பெண் 8 குழந்தைகளை உயிருடன் பெற்றெடுத்ததுதான் இதுவரை கின்னஸ் உலக சாதனை. மகிழ்ச்சியான பிரசவத்துக்காக மாலி மற்றும் மொரோக்கோ நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுக்களுக்கு மாலி சுகாதார அமைச்சர் ஃபேன்டா சிபி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
"இது மிக மிக அரிது, விதிவிலக்கான நிகழ்வு" என 9 குழந்தைகள் பிறந்த மொரோக்கா நாட்டின் கஸபிளாங்கா நகரின் அய்ன் போர்ஜா மருத்துவமனையின் இயக்குநர் யூசுப் அலாயி ஏஎஃப்பி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். 10 மருத்துவர்கள் மற்றும் 25 மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழு பிரசவத்துக்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை எடை கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இங்குபேட்டர் சாதனத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் யூசுப் கூறியுள்ளார்.
காரணம் என்ன? - பிபிசி மருத்துவச் செய்தியாளர் ரோடாஓடியம்போ
இயற்கையாக ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கத்துக்கு மாறானது. பெரும்பாலும் செயற்கைக் கருத்தரித்தல் முறையில் இது நடக்கிறது. ஆயினும் சிஸிக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது.
ஆயினும் கருத்தரிப்புச் சிகிச்சை மூலமே இப்படி நடக்க வாய்ப்புண்டு என்கிறார் கென்யாவின் கென்யாட்டா தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பில் காலுமி. ஆப்ரிக்காவின் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னையால் கருவுறுவதில் சிக்கல் ஏற்படும்போது கருமுட்டையை உருவாக்குவதற்காக மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதனால் மருந்துகளை உட்கொள்ளும் பெண்களுக்கு பல கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுப்பது குழந்தைகளுக்கு தாய்க்கும் ஆபத்தானது. நான்குக்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சுமந்து கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு, கருவின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி பல நாடுகளில் அறிவுரை வழங்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது சிஸியைப் போல பெரும்பாலும் குறைப்பிரசவமே நடக்கிறது. 37 வாரங்களுக்கு முன்னதாக பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. நோய் எதிர்ப்பு ஆற்றல் பலவீனமாக இருக்கும். நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். நாளடைவில் அவர்களுக்கு இயக்கத்தை முடக்கும் பெருமூளை வாத நோய் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.