Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா விஜய்?

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா விஜய்?
, செவ்வாய், 10 மார்ச் 2020 (11:50 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சன் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாவதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

முந்தைய காலகட்டத்தில் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதை விட தன்னுடைய ரசிகர்கள் குறித்து தான் விஜய் அதிகமாக பேசியிருக்கிறார். உதாரணமாக,

தெறி பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, ' என்னுடைய ரசிகர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அடுத்தவர்கள் தொட்ட உயரத்தை உங்களுடைய இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் தொட்ட உயரத்தை அடுத்தவர்களுக்கு இலக்காக வையுங்கள். எல்லோரும் கர்வமே இல்லாமல் வாழ வேண்டும். தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு ஆயிரம் தோல்விகள் மட்டும்தான் காரணம். எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள் எனப் பேசினார்.

மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் போது, இந்த உலகத்தில் அவ்வளவு சுலபமாக நம்மை வாழ விடமாட்டார்கள். நான்கு பக்கத்தில் இருந்தும் அழுத்தம் கொடுப்பார்கள். அதையெல்லாம் நாம் தாண்டி வந்தாக வேண்டும். எல்லோருக்கும் நம்மை பிடித்துப் போய்விட்டால் வாழ்க்கை போரடித்து விடும் என்று பேசினார்.

அதுவரையில் தன்னுடைய படங்களில் மட்டுமே அரசியல் பேசிக் கொண்டிருந்தவர் மெர்சல் பட இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மேடைகளில் அரசியல் பேசுவதை வழக்கமாக்கினார். அதன் மூலம் விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது என சமூக வலைத் தளங்களில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே சர்கார் பட இசைவெளியீட்டு விழா நடந்தது.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில், தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று சர்கார் அமைப்பார்கள். ஆனால், நாங்கள் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம் என தன்னுடைய அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அத்துடன், உண்மையாகவே நான் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். ஒருவேளை நாட்டின் முதலமைச்சரானால், முதல் விஷயமாக லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று அதனை தொடர்புபடுத்தும் ஒரு குட்டிக் கதையையும் சொன்னார். ஒரு தலைவன் சரியாக இருந்தால் கட்சி நன்றாக இருக்கும். தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்றார்.

இந்தப் பேச்சிற்கு பின்னர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். பின்னர் வெளியான பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவதற்கென பல அரசியல் சார்ந்த விஷயங்கள் இருந்தன. அதையெல்லாம் குறித்து விஜய் பேசுவார் என அவருடைய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

அதே போல அந்த நிகழ்வில், பேனர் விழுந்து இறந்த சுபஶ்ரீயின் மரணம் குறித்து பேசும்போது, 'யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள்' என்றார். மேலும், அரசியலில் புகுந்து விளையாடுங்கள் ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்றும், "என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை என்னுடைய ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்" என்றும் கூறினார். சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூகப் பிரச்னைகளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி அதை டிரெண்ட் செய்யுங்கள். வாழ்க்கை என்பது கால் பந்து போட்டி போலத்தான். நாம் கோல் அடிக்கும்போது அதைத் தடுக்க சிலர் வருவார்கள் என்றார்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படப் பிடிப்புத் தளத்திற்கு சென்று வருமான வரித்துறையினர் விஜயிடம் விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் பாஜகவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர். இவற்றையெல்லாம் விமர்சித்து விஜய் பேசுவார் என அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எங்கே நடைபெறப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகாத சூழலில் வருகிற மார்ச் 15ம் தேதி இசை வெளியீட்டு விழா நடப்பது உறுதியாகியுள்ளது. அந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

பல்வேறு மேடைகளில் குட்டிக் கதை சொல்லிப் பழகிய விஜய், 'மாஸ்டர்' திரைப்படத்தில் குட்டிக் கதையை பாடலாகவே பாடியிருக்கிறார். இதுவரை மேடையில் விஜய் பேசிய தத்துவ அறிவுரைகள் சில இந்தப் பாடலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா ஊழியர்களுக்கு பாதுகாப்பு குழு – கமல்ஹாசன் அதிரடி!