Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ் ராக்கை அறைந்த பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் வில் ஸ்மித் – ஆஸ்கர் அகாடமி

கிறிஸ் ராக்கை அறைந்த பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் வில் ஸ்மித் – ஆஸ்கர் அகாடமி
, வியாழன், 31 மார்ச் 2022 (14:01 IST)
ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த பின் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.
 
வில் ஸ்மித்திற்கு எதிராக "ஒழுங்கு விசாரணை" தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார்.
 
வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல்முறை.
 
அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
தங்களது தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கிறிஸ் ராக், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள், விருந்தினர் மற்றும் பார்வையாளர்களிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கோரியுள்ளது.
 
வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்தது ஏன்?
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.
 
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைந்ததாக வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 
50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரே வெளிப்படுத்தியிருந்தார்.
 
கிறிஸ் ராக் ஜாடா குறித்து பேசியது என்ன?
 
ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.
 
அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடா தன் கண்களை சுழற்றி பார்த்தார். அது கிறிஸ் ராக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பதை உணர்த்தியது.
 
இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ராக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார். அப்போது வில் ஸ்மித் பற்றி கிறிஸ் ராக் பேசியபோது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.
 
இந்த நிலையில், வில் ஸ்மித்திடம் கன்னத்தில் அறைவாங்கியபோதும் அந்த சூழலை இயல்பாக்கிக் கொள்ள முயன்ற கிறிஸ் ராக், "தொலைக்காட்சி வரலாற்றில் இது சிறந்த இரவாக இருக்கும்," என்று கூறினார்.
 
அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டு வரும் ஜடா; அலோபீசியா என்றால் என்ன?
கடந்த 2018ஆம் ஆண்டு முகநூலில் தான் தொகுத்து வழங்கிய ரெட் டேபிள் டாக் என்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய ஜடா, "எனக்கு தீவிரமான முடி உதிர்தல் பிரச்னை உள்ளது. இது முதலில் தொடங்கியபோது மிக மோசமாக இருந்தது," என்றார்.
 
தான் குளிக்கும்போது அதிகமாக முடி உதிர்வதை கண்டபோதுதான் முதன்முதலாக தனக்கு இந்த பிரச்னை இருப்பதை கண்டறிந்துள்ளார் ஜடா.
 
"கடவுளே, நான் மொட்டை தலையாக போகிறேனா? என கேட்டுக் கொண்டேன். எனது வாழ்க்கையில் நான் அச்சத்தால் மிகவும் நடுங்கிய தருணம் அது. அதனால்தான் எனது முடியை வெட்டிக் கொள்கிறேன். தொடர்ந்து அதை செய்கிறேன்" என்று தனது நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் ஜடா.
 
அதீத அளவில் முடி உதிர்தல் ஏற்படும் நிலையை அறிவியல் ரீதியாக அலோபீசியா என்று அழைப்பர். இது தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை என சொல்லப்பட்டும் 'ஆட்டோ இம்யூன் கண்டிஷனால்' ஏற்படக்கூடும். அதாவது நமது உடலில் ஆரோக்கியமான செல்லை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தவறாக புரிந்து கொண்டு அழிக்கும் நிலை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிங்க..! – பிரதமரிடம் கோரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!