Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

Prasanth Karthick
வெள்ளி, 3 ஜனவரி 2025 (13:49 IST)

அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வராது என 'லைகா' தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

ஒரு சில படங்களே பொங்கல் அன்று வெளியாகும் என்றிருந்த சூழலில், இந்த அறிவிப்புக்குப் பின், கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அடுத்தடுத்து அறிவித்துள்ளன. என்றாலும், இதில் பல திரைப்படங்களின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருவதால், அனைத்து திரைப்படங்களும் வெளியாகுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

 

எனினும், எந்த பண்டிகைக்கும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 படங்கள் வெளியாகலாம் எனும் நிலையில், இது ஆரோக்கியமான போக்கா? இது திரைத்துறைக்கு சாதகமானதா, என்ன பிரச்னைகள் உள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

 

விடாமுயற்சி தாமதம் ஏன்?
 

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் குறித்த செய்திகள் நீண்ட நாட்களுக்கு ரகசியமாகவே இருந்தன. படத்தின் தலைப்பு, நடிகர்கள், நடிகைகள், ஒரு சில புகைப்படங்களைத் தாண்டி, விடாமுயற்சி எப்படியான படமாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்த வண்ணம் இருந்தனர்.

 

டீஸரின் முடிவில், படம் பொங்கல் 2025 அன்று திரைக்கு வரும் என்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

விடாமுயற்சி திரைப்படத்துடன் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான், இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கியிருக்கும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு முக்கியத் திரைப்படங்களும் வெளியாகவிருந்தன.

 

இன்னும் ஏதாவது ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று லைகா நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடாமுயற்சி திரைப்படத்தை பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைப்பதாக அறிவித்தது. அதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

 

லைகாவின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரே நாளில் எட்டு படங்கள் என்பது ஆரோக்கியமான போக்கா?
 

விடாமுயற்சி வெளியாகவில்லை என்றவுடன், கிட்டத்தட்ட 8 சிறிய திரைப்படங்கள், பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன. வணங்கான், கேம்சேஞ்சர் படங்களோடு சேர்த்து, படைத்தலைவன், டென் ஹவர்ஸ், காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், தருணம், 2கே கிட்ஸ், சுமோ, நேசிப்பாயா என மொத்தமாக, 10 படங்கள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளன.

 

பெரிய நட்சத்திரங்களின் படம் வெளியாகவில்லை என்றாலும், அதிகபட்சம் 4-5 படங்கள் மட்டுமே பண்டிகை விடுமுறை நாட்களில் வெளியாகும். தற்போது 10 படங்கள் வரப்போகிறது.

 

ஒரு பக்கம், ஒரு பெரிய படம் பின் வாங்கியதால் இவ்வளவு சிறிய படங்களுக்கு இடம் கிடைத்துள்ளதைப் போலத் தெரிந்தாலும், இது ஆரோக்கியமான போக்கல்ல என்பதே துறையைச் சேர்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.

 

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

 

"பொங்கல் போன்ற நீண்ட விடுமுறைக் காலங்களில் தங்களின் திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைப்பது நியாயமானதே. ஆனால், இவ்வளவு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது ஆரோக்கியமான சூழலாக நான் பார்க்கவில்லை. வணங்கான் வெளியீடு தொடர்பாக அத்தனை வேலைகளையும் முடித்து, தணிக்கை சான்றிதழ் பெற்று, வெளிநாட்டு விநியோகஸ்த வியாபரத்தையும் முடித்துவிட்டேன். ஆனால், விடாமுயற்சி வெளியீடு உறுதியாகியிருந்தால் கண்டிப்பாக நான் என் திரைப்படத்தை ஒத்தி வைத்திருப்பேன்" என்கிறார் அவர்.

 

கடந்த 2021ஆம் ஆண்டு அவர் தயாரித்த 'மாநாடு' திரைப்படத்துக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அன்றைய ஆண்டு, தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே' வெளியாகப் போவது உறுதியானதால் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' திரைப்படத்தை ஒத்திவைத்தார்.

 

தீபாவளி அன்று வெளியாகியிருந்தாலும் தன் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கும் என்றாலும், போட்டியின்றி தனியாக வெளியிட்ட காரணத்தால், தீபாவளிக்குக் கிடைத்திருக்கும் வசூலை விட 40 சதவிதம் அதிக வசூல் கிடைத்தது என்றார்.

 

"எப்படியும் அஜித்குமார் படத்துக்கே திரையரங்குகள் முன்னுரிமை தரும். மேலும், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் வேறு தெலுங்கிலும், தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களைத் தாண்டி, குறைவான திரையரங்குகளே எனக்குக் கிடைத்திருக்கும். எனவே, நான் வேறு ஒரு தேதியில் வெளியிட்டிருப்பேன். தற்போது வணங்கானுக்கு நல்ல திரையரங்குகள், காட்சிகள் கிடைக்குமென்றாலும் இவ்வளவு படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் மனப்பான்மை எப்படி இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும்" என கூறுகிறார் சுரேஷ் காமாட்சி.

 

எந்தப் படத்துக்கு கூட்டம் வரும் என்று நினைக்கிறார்களோ அதற்கே மக்கள் முன்னுரிமை தருவார்கள் எனக்கூறும் அவர், "இது ஒரு வியாபாரம், எனவே, இதில் எப்படி லாபம் எடுக்கலாம் என்று பார்ப்பதை குறை கூறவே முடியாது" என்றும் கூறுகிறார் சுரேஷ் காமாட்சி

 

அனைத்து படங்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்குமா?
 

இவ்வளவு படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவது எதிர்பார்க்காத சூழல் என்றாலும் இது ஒரு வகையில் திரைத்துறைக்கு நல்லதே என்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் 'கேபிள்' சங்கர்.

 

"பண்டிகை நாட்களில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அதனுடன் அதிகபட்சம் 2 படங்கள் வருவதே கடினம். அந்தப் பெரிய படங்கள் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறைந்தது அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் திரையரங்குகளில் அதைத்தான் பார்க்க வேண்டும் என்கிற ரீதியில், அனைத்துத் திரையரங்குகளிலும் அந்தப் படங்கள் மட்டுமே ஓடும்" என கூறுகிறார் 'கேபிள்' சங்கர்.

 

தற்போது இந்த 8 படங்களில் குறைந்தது 6 படங்கள் திரைக்கு வரும் என தான் எதிர்பார்ப்பதாக கூறுகிறார் சங்கர். அனைத்து படங்களுக்கும் சரியான விகிதத்தில் காட்சிகள் அளிக்கப்பட்டு சம வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். "அதில், 4 படங்களுக்கு 'பரவாயில்லை' என்கிற கருத்து வந்தால்கூட, அது அந்தத் திரைப்படங்களுக்கு நல்லதுதானே?" என்கிறார் 'கேபிள்' ஷங்கர்.

 

பெரிய பட்ஜெட் படங்கள் தங்களின் வசூலைத் திரும்பப் பெற மற்றவர்களுக்கு இடம் தராமல் ஆதிக்கம் செலுத்துவதைவிட இப்படி பல சிறிய பட்ஜெட் படங்கள், பொங்கல் போன்ற நீண்ட விடுமுறை காலத்தில் வெளியாவது, அவை தப்பிப் பிழைக்க நல்ல வாய்ப்பை வழங்கும் என்பது அவருடைய கருத்தாக உள்ளது.

 

"சாதாரண நாட்களில் இந்த சிறிய படங்கள் வந்தால், கண்டுகொள்ளப்படாமல் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்" என்றார் கேபிள் சங்கர்.
 

அவசர அவசரமாக வெளியாகும் திரைப்படங்கள்
 

ஆனால், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தைத் தமிழகத்தில் வியோகிக்கும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூஸர் ஸ்ரீராம், சுரேஷ் காமாட்சி கூறிய கருத்துகளையே பிரதிபலிக்கிறார்.

 

"பொங்கலுக்குக் குடும்பத்துடன் வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக குறைந்தது ஏதாவது ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எங்களுக்கு பொங்கல் தினம் என்பது கிட்டத்தட்ட ரூ.150 கோடி வியாபரத்துக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டது" என்கிறார் ஸ்ரீராம்.

 

கடந்த 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு, வாரிசு என இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைத்ததே இதற்கு உதாரணம் எனக்கூறும் ஸ்ரீராம், "இம்முறை பொங்கலுக்கு வெளியாகும் விடாமுயற்சி மற்றும் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களுக்கும் முதல் சில நாட்கள் நல்ல வசூல் கிடைக்கும் என்றே எதிர்பார்த்திருந்தோம். தற்போது விடாமுயற்சி வெளியாகாத நிலையில், முதலில் 350 என இருந்த கேம் சேஞ்சருக்கான திரைகளை தற்போது 600 வரை அதிகரிக்க திரையரங்குகளிடம் பேசி வருகிறோம்" என்றார்.

 

இதோடு சேர்த்து, பாலகிருஷ்ணாவின் டாகு மஹாராஜ், வெங்கடேஷின் ஷங்கராந்திக்கி ஒஸ்துன்னாம் ஆகிய தெலுங்கு படங்களையும் தங்களுடைய நிறுவனமே வெளியிடுவதால் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

 

வெளிநாடுகளில் தமிழ் படம் வெளியாக வேண்டும் என்றால் வெளியீடு தேதிக்கு 15 நாட்களுக்கு முன் தணிக்கை முடிந்து, பிரதி தயாராக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை என்கிறார் ஸ்ரீராம்.

 

எனவே, இதில் பல படங்கள், இந்தியாவில், தமிழகத்தில் வெளியானால் போதும் என்ற எண்ணத்துடன் தான் வருகின்றன என்றார்.

 

'புரிந்து திட்டமிட வேண்டும்'
 

ஒரு வருடத்தில் வெளியாகும் மொத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகித படங்கள் லாபகரமானதாக இருந்தாலே பெரிய விஷயம் என்கிற நிலைதான் தொடர்ந்து நிலவுகிறது. கோட் (GOAT), அமரன் போன்ற பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் பல நூறு கோடிகளை சம்பாதிக்க, வலுவான மக்கள் கருத்தால், வரவேற்பால் லப்பர் பந்து, மகாராஜா போன்ற படங்கள் சென்ற வருடம் பெரிய வசூலைப் பெற்றன.

 

"தயாரிப்பாளர்கள் கலந்தாலோசித்து, திரைப்படங்களுக்கான தேவை என்ன, மக்கள் எண்ணம் என்ன என்பதைப் புரிந்து திட்டமிட வேண்டும். வெளியீடுகளை வரைமுறைப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ற விநியோகம் என்கிற கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் சுரேஷ் காமாட்சி.

 

முதல் சில நாட்களுக்கு அரங்க வாடகையைத் தரக்கூட சில தயாரிப்பாளர்கள் முன் வந்தாலும், திரையரங்குகள் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை என்கிறார் அவர்.

 

"ஏனென்றால் அவர்கள் விற்கும் உணவிலிருந்தே அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. எனவே, வெறும் அரங்க வாடகை என்பது அவர்களுக்கு லாபம் தருவதாக இருக்காது. இதையெல்லாம் தான் தயாரிப்பாளர்கள் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும்" என்கிறார் சுரேஷ் காமாட்சி.

 

திரையரங்குகள் தாங்குமா?
 

மொத்தமாக திரைப்படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர் தரப்பில் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சென்னை, தாம்பரம் பகுதியில் பிரபல திரையரங்கான வரதராஜா சினிமாஸின் உரிமையாளர் அஷ்வந்திடம் இதுகுறித்து கேட்டோம்

 

"பல திரைகளைக் கொண்டிருக்கும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்களுக்கு இந்தச் சூழல் பெரிய பிரச்னை இல்லை. ஏனென்றால் எப்போதுமே பல படங்களை திரையிடுவதே எங்களுக்கு வழக்கம். ஆனால், ஒன்று அல்லது இரண்டு திரைகளை மட்டுமே வைத்திருக்கும் அரங்குகளுக்கு இது சிக்கலே. ஏனென்றால், நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை மல்டிப்ளெக்ஸாக மாறவில்லை. அப்போது, ஒரு டிசம்பர் மாதம் தமிழில் ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் வரும்போது, எதை எப்போது திரையிடுவது என குழம்பிப் போனோம்" என கூறுகிறார் அஷ்வந்த்.

 

இந்த பொங்கல் விடுமுறையைப் பொருத்தவரை கிட்டத்தட்ட 10 நாட்கள் வெளியாகும் சூழலில், 2-3 பெரிய பட்ஜெட் படங்களையே திரையிட்டு நல்ல வசூலைப் பெற முடியும் என்று அவர் கூறுகிறார்.

 

திரைப்படங்களின் நீளத்தை வைத்தும் இதில் திரையரங்குகள் முடிவு செய்யும் என்கிறார் அவர். ஆனால் இந்த நிலையை சற்று சமாளிக்க சில படங்கள் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும், சில படங்கள் சில நாட்கள் கழித்தும் வெளியாகலாம் என கணிக்கிறார்.

 

அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துகொண்டிருந்தாலும் எப்படியும் அத்தனை படங்களும் வெளியாவது சந்தேகம் என்பதே பொதுவாக அனைத்துத் தரப்பும் கூறும் கருத்தாக இருக்கிறது. ஆனால், வரும் அத்தனை படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று விடுமா என்பது சந்தேகமே.

 

ஒரு முறை நடிகர் பார்த்திபன், "இப்படியான விடுமுறை நாட்களுக்கும், பண்டிகை தேதிகளுக்கும், பெரிய நடிகர்கள் படங்களைவிட, சிறிய படங்கள் வருவதே நல்லது. ஏனென்றால், எப்படியும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் நல்ல வசூலைப் பெறும். ஆனால், சிறிய படங்களுக்கு, இப்படியான விடுமுறை தினங்கள், மக்களிடம் சென்று சேர ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்" என்றார். அவர் கூறியது நடக்குமா, இல்லையா என்பது வரும் பொங்கல் பண்டிகை தினங்களில் தெரிந்துவிடும்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது.. ஆயுத விற்பனையும் செய்தார்களா?

தடையை மீறி யாத்திரை: மதுரையில் நடிகை குஷ்பு கைது

ஸ்பீட் ப்ரேக்கரில் மோதி திரும்ப வந்த உயிர்..! மகாராஷ்டிராவில் ஆச்சர்ய சம்பவம்!

காலை முதல் அமலாக்கத்துறை சோதனை: முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

கணவன் கழுத்தில் கயிறு கட்டி தெருவில் இழுத்து சென்ற மனைவி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments