இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இந்தப் போக்கு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மே 26 வியாழக்கிழமை பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், முடிவடைந்த பல திட்டங்களைத் தொடக்கிவைப்பதோடு, பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் எஸ். பொம்மை, ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் #GobackModi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். ஆனால், இந்த முறை மோதி வருவதற்கு முதல் நாளே இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. வியாழக்கிழமை காலையில் இருந்து இந்த ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. நண்பகல் 12 மணி அளவில் இந்த ஹேஷ்டேக் உடன் 2 லட்சத்து 15 ஆயிரம் ட்வீட்கள் பதிவிடப்பட்டிருந்தன.
இதற்குப் போட்டியாக பாஜகவினர் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேகின் கீழ் சுமார் 4 லட்சத்து ஐம்பதாயிரம் ட்வீட்கள் பதிவாகியிருந்தன. பிரதமர் மோதி சென்னையில் வந்து இறங்கும் மாலை நேரத்தில் இந்த ஹேஷ்டேக் யுத்தம் உச்சம் தொடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழ் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் 'வணக்கம் மோதி' என்ற வாசகத்துடன் முழுப் பக்க விளம்பரம் பாரதிய ஜனதா கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் இதுபோல #GobackModi ட்ரெண்ட் ஆவது வழக்கமாகிவிட்டது என்றாலும், இது எங்கு, எப்போது, எப்படித் தொடங்கியது என்று பார்க்கலாம்.
GobackModi ஹேஷ்டேகின் தொடக்கம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற ராணுவத் தளவாட கண்காட்சிக்காக பிரதமர் மோதி ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக இருந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் சுறுசுறுப்படைந்தன. தி.மு.க., ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மோதியின் தமிழ்நாடு வருகையை கடுமையாக எதிர்த்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மோதி ஒத்திப்போடுவதாக குற்றம்சாட்டின.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 12, 2018 அன்று மோதி சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, தி.மு.க., ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்தன.
மேலும், மோதி வருகை தொடர்பான தங்களுடைய எதிர்ப்பை #GoBackModi என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்தனர். லட்சக்கணக்கான ட்விட்டர் பதிவுகளுடன் அன்று அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
#GoBackModi என்ற ஹேஷ்டேகில் அந்த நாளின் பிற்பகல் வரை மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்டுகள் பதிவிடப்பட்டன. எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து அருகில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நரேந்திர மோதி செல்வதற்காக ஐ.ஐ.டி வளாக சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.
சாலை வழியாகப் பிரதமர் செல்லும்போது அவருக்கு எதிர்க் கட்சியினர் கருப்புக் கொடி காட்டுவார்கள் என்பதால் அதைத் தவிர்க்க காவல்துறையினர் இவ்வாறு செய்ததாக அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதற்குப் பிறகு 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழ்நாடு வந்தார் நரேந்திர மோதி. அன்றும் #GoBackModi என்று ஹேஷ்டேக் மூலம் நரேந்திர மோதிக்கு எதிராகவும், #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகில் மோதிக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.
சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு வந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்து இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், நரேந்திர மோதி முதன்முதலாக சென்னைக்கு வருகை தந்த நாள் அது.
அப்போதும் சுமார் ஒரு லட்சம் ட்வீட்களை கடந்து உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் சில மணி நேரம் முதலிடம் பிடித்தது #GoBackModi ஹேஷ்டேக். சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று நடந்தது. அன்றும் #GoBackModi இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
சீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டானது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழிபெயர்ப்பை பெற்று, அதை ஹேஷ்டேகாக பயன்படுத்தி பதிவிட்டனர். இந்த மொழிபெயர்ப்பு துல்லியமானதாக இல்லை என்றும் அப்போது கூறப்பட்டது.
#GoBackModi என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டவர்களில் சிலர் நாங்கள் gobackmodi என்று பதிவிட்டாலும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்றும் கூறினர். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 14 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் கேரளா வந்தார். அப்போதும் GoBackModi மற்றும் PoMoneModi ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆகின.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சி ஆளும்கட்சியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் எதிரொலிக்கும் மோதி எதிர்ப்பில் அக்கட்சி அதிகாரபூர்வமாக பங்கேற்பதில்லை. இருந்தபோதும், அக்கட்சியின் ஆதரவாளர்கள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்டோர் சமூக வலைத் தளங்கள் மூலம் இந்த எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இதனிடையே, பிரதமர் மோதியை தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோதியை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.