Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?

Webdunia
திங்கள், 4 மே 2020 (18:54 IST)
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (மே 4) அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று ஒருவர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 266 பேருக்கு பாதிப்பு

இன்று தமிழகத்தில் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 527 பேரில் அதிகபட்சமாக 266 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, கடலூரில் 122 பேருக்கும், விழுப்புரத்தில் 49 பேருக்கும், பெரம்பலூரில் 25 பேருக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், தர்மபுரி, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

கோயம்பேடு சந்தை இடமாற்றம்

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை (மே 5) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அதன் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற வியாழக்கிழமை (மே 7) முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"அடுத்துவரும் சில நாட்களிலும் அதிகரித்து காணப்படும்"

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை கோயம்பேடு சந்தையைச் சேர்ந்த அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா சோதனை செய்யப்படவுள்ளதால், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் அடுத்துவரும் சில நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதோடு, கோயம்பேடு சந்தையில் இருந்து பல மாவட்டங்களுக்கு சென்ற வியாபாரிகள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என பலருக்கும் தொற்று இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார். கோயம்பேடு சந்தையில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ளவர்களையும் சோதனை செய்யவேண்டியுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் 50 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இதுவரை, 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் 2,662 நபர்களுக்கு தொற்று இருக்கும் வாய்ப்புள்ளதால், கண்காணிப்புக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments