Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை எதிர்ப்பது ஏன்? பியூஷ் பேட்டி

சென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை எதிர்ப்பது ஏன்? பியூஷ் பேட்டி
, வெள்ளி, 6 ஜூலை 2018 (12:44 IST)
சென்னை-சேலம் இடையே அமையவுள்ள எட்டுவழிச் சாலை திட்டம் அழிவுக்கான திட்டம் என்று மக்கள் நம்புவதால் அந்த திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் தெரிவித்துள்ளார்.



சென்னை - சேலம் விரைவு சாலை திட்டம் குறித்து பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் எதிர்ப்புகள் கிளம்பியது ஏன், விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் பயன்தருமா என்ற கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

சென்னை -சேலம் எட்டு வழிசாலை கொண்டுவந்தால் பயணநேரம் ஐந்து மணிநேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் 15 நிமிடங்களாக குறையும் என அரசு கூறுவது குறித்து பேசிய அவர், ''சரக்கு லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த திட்டத்தை எதிர்கிறார்கள். தற்போது செலுத்திவரும் சுங்கக்கட்டணம் அதிகமாக உள்ளது என்று கருதும் அவர்கள், விரைவுப் பாதை வந்தால், மேலும் கட்டணம் உயரும் என்பதால் எதிர்க்கின்றனர். தற்போது சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை செல்லும் பாதையை அரசு சீர்செய்து தரவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.


அடுத்ததாக சொந்தமாக கார் ஓட்டுபவர்கள் தற்போது உள்ள பாதையில் செல்வதற்கு பதிலாக 277 கிலோமீட்டர் ஒரே சாலையில் பயணிக்கும்போது, டீசல் குறைவாக செலவாகும் என்கிறது அரசு. இந்த சாலையில் அதிக கட்டணம் செலுத்திச் செல்லும் நபர்கள் வெளிநாட்டு ரக கார்களை வைத்திருக்கும் ஒரு பகுதியினர் மட்டுமே. அரசு பேருந்துகள் கூட எட்டுவழிச் சாலையில் செல்ல , செலுத்த வேண்டிய சுங்கக்கட்டணம் அதிகமாக இருக்கும். இதற்கு பதிலாக அரசு சென்னை சேலம் இடையே கூடுதல் ரயில் சேவையை அதிகரித்தால் பெருமளவு பொதுமக்கள் பயன்பெறுவார்கள்,''என்கிறார்.


webdunia


பொது மக்கள் பல காலமாக ரயில் சேவையை அதிகரிக்கவேண்டும் என்று கேட்டபோதும் அதை செய்யாமல், தற்போது பெரும் செலவை ஏற்படுத்தும் விரைவுசாலை திட்டத்தை கொண்டுவருவதால்தான் மக்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்கிறார் அவர்.

எட்டுவழிச்சாலை கொண்டுவருவதால் சேலம்,தருமபுரி,திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது குறித்து பேசிய அவர், ''இதுவரை என்ன விதமான தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பதை அரசு தெளிவாக விளக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் ஒரு திருமண மண்டபத்தை மக்கள் கூறுகிறோம், தொழில்வளர்ச்சி பற்றி விளக்குங்கள் என்று அறிவித்தோம். எங்களுக்கு எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை. தார் சாலை அமைப்பதால், தக்காளி விலை குறையுமா? இந்த திட்டத்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். என்ன விதமான வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி என்பதை விளக்கிக் கூற ஏன் யாரும் முன்வரவில்லை?'' என கேள்வி எழுப்புகிறார்.

பசுமை விரைவுச் சாலையால் யார் பயன்பெறுவார்கள் என்று கேட்டபோது, ''ரூ.10,000கோடி செலவில் இந்த சாலை அமைக்கப்படும் என்கிறார்கள். அப்படி சாலை அமைத்தால், சுங்கக்கட்டணம் என்னவாக இருக்கும்? அந்த கட்டணத்தை யார் வசூல் செய்வார்கள்? விரைவுபாதை என்றால் அந்த சாலையில் இடையில் எங்கும் கடைகள் திறக்கமுடியாது. அந்த சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வீட்டுமனைகளின் விலை என்னவாகும் என விரிவான பதில்கள் எதுவும் இல்லை.வெறும் 2:15 மணி நேரத்தில் சென்னை -சேலம் இடையே பயணிக்கலாம் என்றால், ஒரு மணிநேரத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லவேண்டும். தனியார் பேருந்துகள், கார்கள் மட்டுமே இந்த வேகத்தில் செல்லும். அரசு பேருந்துகள் அல்ல. இதன்மூலம் கார்களை வைத்திருப்பவர்கள், தனியார் நிறுவங்களுக்கான திட்டமாக மட்டுமே இந்த சாலை இருக்கும் என்பது தெளிவு,''என்று விளக்குகிறார்.

இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக அரசு திட்டத்தின் சாதக,பாதகங்களை ஆராய்ந்து வெளியிடவேண்டிய அறிக்கையை இன்னும் தாயார் செய்யவில்லை என்று கூறும் பியூஷ், ''பொது மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். கார்களில் செல்பவர்கள் தினமும் அந்த சாலையை பயன்படுத்துவார்களா என்று தெரியவில்லை. தற்போது எத்தனை கார்கள் எந்த பாதையில் செல்கின்றன? இந்த பாதை வந்தால் யாருக்கு பயன் என்பதை அரசு விளக்கவேண்டும்.

பொது மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவில்லை, சாலை அமையவுள்ள பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இது தொடர்பாக வனத்துறையில் ஒப்புதல் பெறவில்லை, எந்த அறிக்கையையும் வெளியிடாமல் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது எப்படி? இதற்கான பதில்களை தராமல் மக்கள் மீது வழக்கு போடுகிறார்கள், சிறையில் அடைகிறார்கள்,'' என்கிறார்.

பத்தாயிரம் கோடி செலவில் அமைக்கவுள்ள சாலைதிட்டம் பற்றிய அடிப்படை தகவல்களைக் கூட அரசு தெரிவிக்காதது ஏன் என்று கேட்கும் அவர், ''இந்த திட்டத்திற்கான நிதியை அளிக்கப்போவது யார்? இந்த திட்டத்திற்கு இத்தனை ஆயிரம் கோடிகள் செலவாகும் என்று எவ்வாறு கணக்கிடப்பட்டது? நெடுஞ்சாலைத் துறை மூலம் அமைக்கப்படும் சாலைகளில், ஒரு கிலோமீட்டர் நான்கு வழிச் சாலையை அமைக்க, நான்கு கோடி ரூபாய் செலவாகும் என்று அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன. எட்டு வழிச்சாலை அமைத்தால், அந்த தொகை இரண்டு மடங்காக உயரும். ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10,000 கோடி செலவு எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும்,'' என்று புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்.

சுமார் 49 ஹெக்டேர் வனப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து சாலையை கொண்டுசெல்ல அரசு திட்டமிட்டுள்ளது குறித்து பேசிய அவர், ''சுரங்கப்பாதை அமைக்கலாம் என்று முடிவு செய்வதற்கு முன்னதாக, அங்கு நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ள பகுதிகளை கண்டறியவேண்டும். அடிப்படையாக வனத்துறையிடம் எந்த ஒப்புதலையும் பெறவில்லை. 6,500 மரங்களை வெட்டவுள்ளதாகவும், அதற்கு பதிலாக மூன்று லட்சம் மரங்களை நடுவதாகவும் கூறுகிறார்கள்.

முதலில் மரத்தை எண்ணும் பணியே தொடங்கவில்லை. இந்த திட்டம் பற்றி வெளிப்படையாகப் பேசலாம். பொது மக்களின் பணத்தில், பொது மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதில் என்ன பிரச்சனை உள்ளது? நாட்டுக்கு நன்மை அளிக்கும் திட்டம் என்பதை தெளிவுபடுத்தினால், நாங்களும் அதற்கு துணை செய்யவோம். எதிர்க்கமாட்டோம்,''என்றார்.


தற்போது நகரத்தில் வாழும் மக்களுக்கு தேவையான உணவு ,குடிநீர்,மின்சாரம் என எல்லா தேவைகளும் கிராமங்களில் இருந்து பெறப்படுகின்றன. இன்னும் எத்தனை கிராமங்கள் தொடர்ந்து தியாகம் செய்யவேண்டும். இந்த சாலைக்காக சேதமாக்கப்போகும் வனப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்வது இயலாத காரியம். பல இடங்களில் அரசு திட்டங்கள் மூலம் நடப்பட்ட மரங்கள் எங்கே என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது , அரளிச்செடிகளை காட்டுகிறார்கள். இத்தனை ஆண்டுக் காலத்தில் அரசாங்கம் முழு முயற்சி எடுத்து, தரிசாக, பாழ்பட்ட ஒரு இடத்தை வனப்பகுதியாக மாற்றியதற்கு சாட்சி உள்ளதா? காடுகளை வளர்ப்பதை விட முதலில் அதை சேதப்படுத்தாமல் இருந்தாலே நல்லது,'' என்கிறார் பியூஷ்.

மலைகளை அழித்துவிட்டு உருவாக்கப்படும் சாலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்று கூறும் அவர்,''சருகு மலை, ஜவ்வாது மலை, கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள நீர்ப் பிடிப்பு பகுதிகளை அழித்துவிட்டு சாலைகளை கொண்டுவந்தால், அந்த இழப்பைச் சரிசெய்யமுடியாது. தண்ணீர் பஞ்சமும் அதிகரிக்கும். சேலம் மாவட்டத்தில் சுயமுயற்சியால் மூக்கணேரி என்ற பகுதியில் 12,000 மரங்களை வைத்து, பராமரித்ததில் இன்று அந்த பகுதி வளமாகி உள்ளது.

இதுபோல ஒரு எடுத்துக்காட்டை அரசு நிகழ்த்தியிருந்தால் மக்கள் நம்புவார்கள். ஒரு திட்டம் கொண்டுவருகிறோம், கேள்வி கேட்காதீர்கள், விவரங்கள் தரமாட்டோம், மீறினால் கைது செய்வோம் என்று அச்சுறுத்துவதால் நாங்கள் இந்த எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்க்கிறோம்,'' என்று தெரிவித்தார் பியூஷ் மனுஷ்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Mr.சந்திரமெளலி திரைவிமர்சனம்