Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்: லாப நோக்கம் காரணமா?

தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்: லாப நோக்கம் காரணமா?
, திங்கள், 30 மே 2022 (14:38 IST)
தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் கிட்டத்தட்ட இரண்டில் ஒன்று சிசேரியன் முறையில்தான் நடைபெறுகிறது.

இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 11% வரை அதிகரித்துள்ளது மத்திய அரசின் தேசிய குடும்பநல கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பது சுகாதார வல்லுநர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்வு ஒன்றில் பேசுகையில், ''சிசேரியன் பிரசவங்களைத் தவிர்க்க அரசு பரிந்துரைக்கும். மருத்துவர்களின் பேராசை தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம்'' என கூறியிருந்தார். இந்த கருத்து அப்போது விவாதப் பொருளாகியிருந்தது.
 
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய குடும்பநல கணக்கெடுப்பை நடத்துகிறது. 2019 - 2021-ம் ஆண்டுக்கான ஐந்தாம் தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
 
இந்தியளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில்
 
அதன்படி, தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் 44.9% சிசேரியன் முறையில் நடைபெறுகிறது. தேசிய அளவில் தெலங்கானா (60.7%) மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுகின்றன.
 
கடந்த 2015 - 2016 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நான்காவது குடும்பநல கணக்கெடுப்பில் இது 34.1% ஆக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சிசேரியன் முறை பிரசவங்கள் 10.8% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 47.5 சதவிகிதமும் கிராமப்புறங்களில் 42.9 சதவிகிதமும் பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடைபெறுகின்றன.
 
அதே சமயம் சிசேரியன் முறையில் நடைபெறும் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில்தான் அதிகம் நடைபெறுகின்றன. நகர்ப்புறங்களில் 61.5%, கிராமப்புறங்களில் 65.7% பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் நகர்ப்புறங்களில் 37.5%, கிராமப்புறங்களில் 35.1% பிரசவங்கள் நடைபெறுகின்றன.
 
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, "பிரசவத்தின் போது ஏற்படுகிற இறப்புகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிசேரியன் பிரசவங்கள் நிகழ்கின்றன. ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிக்கும் போது சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நிகழ்கின்றன. அதே சமயம் குறித்த நேரத்தில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என ஜோதிட முறையில் நாள், நேரம் குறித்து நடத்தப்படும் சிசேரியன் பிரசவங்களும் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
 
சமீப காலங்களில் கர்ப்ப கால சர்க்கரை நோய் என்பதும் அதிகரித்து வருகிறது. அதனால் கருவிலேயே குழந்தைகள் எடை கூடி பிறக்கின்றன. அத்தகைய சூழலில் இயற்கையான பிரசவம் என்பது கடினம். சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். பிரசவத்தின் போது உள்ள காரணிகளுக்கு சமமாக கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற காரணிகளும் சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 
44% எச்சரிக்கை அளிக்கக்கூடியது
 
ஆனால், 44% சிசேரியன் பிரசவங்கள் என்பது எச்சரிக்கை அளிக்கக்கூடிய விஷயம். 10 - 15% வரை சிசேரியன் பிரசவங்கள் இருப்பது இயல்பான அளவு. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவும் இது தான். அதிகபட்சம் 20% வரை இருக்கலாம். சிசேரியன் அளவு குறைவாக, குறிப்பிட்ட அளவுக்குள் இருப்பது தான் ஆரோக்கியமானது, இயல்பானது.
 
தனியார் லாபத்திற்காக சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடத்தப்படுவதாக ஒரு பார்வை உண்டு. ஆனால், அது முழுவதுமாக உண்மை கிடையாது. தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களைப் பார்த்தால் சுகப் பிரசவங்களோடு ஒப்பிடுகையில் சிசேரியன் பிரசவங்களுக்கு மிகப்பெரிய வேறுபாடு இருக்காது. எனவே, சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கோடிட்டு காட்டிவிட முடியாது.
 
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கான வசதிகள் முழுமையாக உள்ளன. மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளன. அதனால் தான் அங்கு தனியார் மருத்துவமனைகளை விடவும் சிசேரியன் பிரசவங்கள் குறைவாகப் பதிவாகின்றன. இதற்காக அரசையும், மருத்துவர்களையும் மட்டும் கைகாட்டிவிட முடியாது. மக்களுக்கும் இதில் சமமான பங்கு உள்ளது.
 
அரசு செய்ய வேண்டியது என்ன?
முதலாவதாக பிரசவங்கள் அனைத்தையும் முறையாக தொடரந்து தணிக்கை செய்ய வேண்டும். சரியான சூழலில் தான் சிசேரியன் பிரசவங்கள் பரிந்துரைக்கப்படுகிறதா என்கிற தரவுகள் கிடைத்தால் தான் இதற்கான காரணத்தை நிறுவ முடியும். இத்தகைய தணிக்கை சிறிய அளவில் நடந்து வருகின்றன என்றாலும் பரந்துபட்ட அளவில் நடத்தப்பட்ட வேண்டும்" என்றார்.
 
இது தொடர்பாக எழும்பூர் மகப்பேறு நிறுவனத்தின் இயக்குநர் விஜயா பிபிசி தமிழிடம் பேசுகையில், "உலக சுகாதார நிறுவனம் 20 சதவிகிதத்திற்குள் தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், அதை கடைபிடிப்பது மிகக் கடினமான ஒன்று. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 30% என்பது சராசரியாக இருந்து வருகிறது. சிசேரியன் பிரசவங்களை தேர்வு செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.வி.எஃப் முறையில் கருத்தரித்தவர்களாக உள்ளனர்.
 
அதிகரிக்கும் ஐ.வி.எஃப் முறை கருத்தரிப்பு
கருத்தரிப்பு சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்கின்ற பெற்றோர்கள் இயற்கையான பிரசவத்தை தேர்வு செய்வதை ஆபத்தாக உணர்கின்றனர். அதனால் தான் சிசேரியன் முறையை தேர்வு செய்கின்றனர்.
 
அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் மருத்துவர்களின் பற்றாக்குறை தான். தனியார் மருத்துவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ஒரே சமயத்தில் பயிற்சி செய்கின்றபோது ஒரு குறிப்பிட்ட பிரசவத்திற்கு அதிக நேரம் செலுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
 
அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் பிரசவ தணிக்கை நடத்தப்படுகிறது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்தால் அங்கு தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதைப் போன்று தனியார் மருத்துவமனைகளில் தணிக்கை செய்யப்படுவதில்லை.
 
பெரும்பாலும் முதல் குழந்தை சிசேரியன் முறையில் பெற்றவர்களுக்கு இரண்டாவது குழந்தையும் சிசேரியன் முறையில் பெறுவது தான் இதன் விகிதம் அதிகமாக பதிவாகுவதற்கு காரணம். எனவே, முதல் பிரசவத்திலே சிசேரியன் முறையை தவிர்த்து சுகப் பிரசவத்திற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தாயால் முடியாத கட்டத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவம் பரிந்துரைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் அத்தகைய மேற்பார்வை செய்யப்படுவதில்லை.
 
பிரசவ நேரத்தில் ஏற்படுகிற இறப்புகளை குறைப்பதில் சிசேரியன் முறை ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது உண்மை. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
 
அரசின் திட்டங்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதைப் போன்று தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவ தணிக்கை முறையாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு தேவையான வழிமுறைகளையும் அறிவிக்கப்பட வேண்டும்.
 
அதே போல் மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்ற Mid Wife என்கிற திட்டமும் தமிழ்நாட்டில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்ப காலம் தொடங்கி பிரசவம் முடிந்த பிறகும் வரை தாய்மார்களுக்கு முழுமையான உதவி வழங்க செவிலியர்களுக்கு `Mid Wife` பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்படும். இதன் மூலம் சிசேரியன் விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என நம்புகிறோம்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்! – திருச்சி மாவட்ட திமுக தீர்மானம்!