Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2021 : MI Vs KKR Vs PBKS Vs RR - கடைசி பிளே ஆஃப் இடம் யாருக்கு?

Advertiesment
ஐபிஎல் 2021 : MI Vs KKR Vs PBKS Vs RR - கடைசி பிளே ஆஃப் இடம் யாருக்கு?
, திங்கள், 4 அக்டோபர் 2021 (13:35 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் லீக் சுற்றின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டன. பிளேஆப் சுற்றில் பங்குபெற இன்னும் ஒரேயொரு இடம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆனால் அந்த இடத்தைப் பிடிப்பதற்கு நான்கு அணிகள் போட்டியில் இருக்கின்றன.

சென்னை அணி முதலில் தனது பிளே ஆப் இடத்தைக் கைப்பற்றியது, அதன் பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றதன் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இரு போட்டிகளுமே பிளே ஆப் சுற்றுக்கான இடங்களை இறுதி செய்வதற்கான முக்கியமான போட்டிகளாக அமைந்தன.

ஐபிஎல் இரண்டாம் கட்டப் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறிவந்த ராயல் சேலஞ்சலர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது. மேக்ஸ்வெல்லின் அதிரடியான அரைச் சதம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.

இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முக்கியமான போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, பிளேஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சுப்மன் கில்லின் அரைச் சதமும் அந்த அணியின் கட்டுப்பாடான பந்துவீச்சும் வெற்றியைக் கொண்டுவந்தன.

கடைசி பிளே ஆப் இடம் யாருக்கு?

இப்போது மூன்று அணிகள் பிளே ஆப் இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், பிளே ஆஃப் பெட்டியில் நான்காவதாக ஒரேயொரு இடம் மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆனால் போட்டியில் நான்கு அணிகள் இருக்கின்றன.

ஹைதராபாத் அணி மட்டுமே இப்போதைக்கு போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது. 12 போட்டிகளை ஆடிவிட்ட அந்த அணி இதுவரை 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பில்லை.

பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இவற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே மீதமிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் தலா இரண்டு போட்டிகள் இருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. அந்த அணி அடுத்துவரும் இரண்டு போட்டிகளில் வென்றாலும், மற்ற அணிகளின் தோல்வி மற்றும் ரன்ரேட் ஆகியவற்றைப் பொறுத்தே அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் 7-ஆவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும், ஹைதராபாத் அணியுடனும் மும்பை இந்தியன்ஸ் மோத வேண்டியிருக்கிறது. இவ்விரு போட்டிகளில் வென்று 14 புள்ளிகளைப் பெற்றாலும், கொல்கத்தா அணியின் வெற்றி தோல்வியும், ரன் ரேட்டுமே மும்பை அணியின் பிளேஆஃப் வாய்ப்பை முடிவு செய்யும்.

முந்தும் கொல்கத்தா

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை புள்ளிகள் அதிகமாக இருப்பதுடன் ரன் ரேட்டிலும் மற்ற மூன்று அணிகளை விட கூடுதலாகப் பெற்றிருக்கிறது. கொல்கத்தாவின் ரன் ரேட் +0.294. போட்டியில் இருக்கும் மற்ற மூன்று அணிகளுமே மைனஸில் ரன் ரேட்டை வைத்திருக்கின்றன.

கொல்கத்தா அணிக்கு வரும் 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கடைசி போட்டி இருக்கிறது. அந்தப் போட்டியில் வென்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பின் தங்கினால் பிளே ஆஃப்பில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆயினும் அது பெரிய அச்சுறுத்தலாக இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்துவிட்டால்கூட, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவுக்கு வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக 5-ஆவது இடத்தில் இருப்பது பஞ்சாப் கிங்கஸ். அந்த அணிக்கு இன்னும் ஒரேயொருபோட்டி மட்டுமே இருக்கிறது. வரும் 7-ஆம் தேதி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத வேண்டும். பிளேஆப் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும். அதன் பிறகும், கொல்கத்தா அணியின் ரன்ரேட் இந்த அணிக்குச் சிக்கலாக இருக்கும்.

ஆறாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் இருபோட்டிகள் இருக்கின்றன. பிளே ஆஃப் போட்டியில் இருக்கும் மும்பையுடனும், கொல்கத்தாவுடனும் மோதவேண்டியிருக்கிறது. இவ்விரு போட்டிகளிலும் வென்றுவிட்டால் 14 புள்ளிகளுடன் மற்ற மூன்று அணிகளைப் பின்னுக்கு தள்ளிவிடலாம். ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், ரன் ரேட்டை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

பிளே ஆஃப் கனவில் இருக்கும் நான்கு அணிகளுமே அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுடன் ரன்ரேட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் போட்டியில் கூடுதல் வாய்ப்பிருப்பது கொல்கத்தா அணிக்கே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உரிமையை மீட்கலாம்.. வாங்க..! – 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!