Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?

இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?
, புதன், 8 மே 2019 (18:51 IST)
இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது.


 
இலங்கை முழுவதும் சுமார் 9.6 சதவீதமாக வாழும் இஸ்லாமியர்கள், கிழக்குப் பகுதியில் செறிந்து வாழ்கிறார்கள். அந்நாட்டில் இஸ்லாமியர்கள், தமிழர்களுக்கு (12.5%) அடுத்தபடியாக இரண்டாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். பல இனங்கள் வாழும் எந்த ஒரு நாட்டிலும் நிகழ்வதைப் போலவே, இஸ்லாமியர்களும் தங்கள் சக இனத்தவர்களுடன் இணைந்தும் முரண்பட்டும் வாழ்ந்துவருகின்றனர்.
 
இங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பொதுவாக வர்த்தகத்தில் மட்டும் சிறந்து விளங்குவதாகவே பொதுவான கருத்து இருந்தாலும் விவசாயத்திலும் மீன்பிடிப்பிலும்கூட பெருந்தொகையான இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

webdunia

 
ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் 41.6 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் 1.6 சதவீதம் பேர் அரசாங்கப் பணியில் இருப்பதாகவும் 2007ல் வெளிவந்த தனது புத்தகமொன்றில் ஆஸிப் ஹுசைன் குறிப்பிடுகிறார். மன்னார் மாவட்டம், பொலனறுவை, அனுராதபுரம், மொனராகலை ஆகிய பகுதிகளிலும் விவசாயத்தில் இஸ்லாமியர்கள் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.
 
கொழும்பு, காத்தான்குடி போன்ற பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் முழுக்க, முழுக்க வர்த்தகத்தில்தான் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அம்பாறை போன்ற மாவட்டங்களில் பெருந்தொகையான இஸ்லாமியர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிற பிரிவினருக்குமான இணக்கத்திற்கும் முரண்பாடுகளுக்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி இருந்துவருகிறது. பொதுவாக வெற்றிகரமான வர்த்தகர்களாக அறியப்படும் இலங்கை இஸ்லாமியர்கள், பெரிதும் பிரச்சனையில்லாத, அமைதியான போக்கையே விரும்புகின்றனர். இருந்தபோதும் சமீத்திய வரலாற்றில் பெரும்பான்மை பௌத்தர்கள், தமிழர்களோடு பல தருணங்களில் முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்பட்டிருக்கின்றன.

webdunia

 
சிங்களர் - இஸ்லாமியர் மோதல் வரலாறு
 
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது 1915ஆம் ஆண்டு மே மாதம் கம்பளையில் சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இது கம்பளையில் துவங்கி கண்டி, கொழும்பு, புத்தளம், ரத்தினபுரி, மஹியங்கனை போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது. அன்றைய கணக்கெடுப்பின்படி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டன. 17 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாயின.
 
2001ல் மாவனல்லைப் பிரதேசத்தில் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு கலவரம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 30 சிங்களர்களின் கடைகள் உட்பட 140க்கும் மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன. எட்டுக்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன.
 
2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கு மாகாணமான களுத்துறையிலும் 2018ல் அம்பாறை, திகண பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றன.

webdunia
 
தமிழர்களிடமிருந்து விலகி நின்ற இஸ்லாமியர்கள்
 
இதேபோல, இஸ்லாமியர்களுக்கும் வடக்கு - கிழக்கில் வசிக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவிலும் பல ஏற்ற இறக்கங்கள் உண்டு. கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வாழ்வில் உள்ள பல அம்சங்கள் தமிழர் பண்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டவை. குறிப்பாக திருமணச் சடங்குகள்.
 
அதேபோல விவசாயம், மீன்பிடி போன்றவற்றில் இரு தரப்பினருமே இணைந்தே பணியாற்றினர். இரு தரப்பினரின் சமயத்தலங்களுக்கும் இரு தரப்பினரும் செல்வதும் தொடர்ந்து நடந்தே வந்தது.
 
இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்
ஆனால், 1980களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் துவங்கியபோது நிலைமை மாறியது. தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்தபோது, இஸ்லாமியர்கள் நடுநிலை வகிக்கவே விரும்பினர். ஆனால், ஒருகட்டத்தில் ஏதோ ஒரு பக்கம் சாய வேண்டிய நிலை ஏற்பட்டபோது நிலைமை சிக்கலான ஒன்றாக உருவெடுத்தது. 80களில் உருவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் புலிகள் இயக்கத்துடனான முரண்பாட்டை கூர்மைப்படுத்தின.
 
மன்னாரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, காத்தான்குடி பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஏறாவூர் படுகொலை, வடக்கிலிருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டது ஆகியவை தமிழர்களின் போராட்டத்திலிருந்து முஸ்லிம்களை முழுமையாக விலக்கியது.
 
"என்னை ஒரு முறை புலிகள் பிடித்துச் சென்றனர். முக்கியத் தளபதி ஒருவர் முன்பாக நிறுத்தினர். அப்போது நான் அவரிடம் சொன்னேன், 'நீங்கள் இப்போது என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் பேசும் தமிழைத்தான் நானும் பேசுகிறேன். நான் உங்கள் பக்கம்தான் நிற்க வேண்டும். ஆனால், நீங்கள் எங்களை விலக்குகிறீர்கள். ஒரு யுத்தத்தில் ஒரு பக்கம் எங்களை நிராகரித்தால், நாங்கள் என்ன முடிவு எடுக்க முடியும்?' என்று கேட்டேன். அவர் என்னை விட்டுவிட்டார். ஆனால், போராளிக் குழுக்களுக்கும் வட - கிழக்கிலங்கை இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரண் கடைசிவரை நீடித்தது." என்கிறார் காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான புவி ரஹ்மத்துல்லா.
 
இனப் போராட்டம் துவங்கியபோது துவக்கத்தில் பல போராளிக்குழுக்களில் இஸ்லாமிய இளைஞர்களும் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, பிறகு மெல்ல மெல்ல அவர்கள் இதிலிருந்து விலக்கிக்கொண்டனர் என்கிறார்.
 
குறிப்பாக இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது, தாங்கள் ஒரு தரப்பாக கருதப்படாமலேயே வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டபோது மிகவும் ஏமாற்றமடைந்தனர் இஸ்லாமியர்கள்.
 
ஆனால், இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை கிறிஸ்தவர்களோடு இஸ்லாமியர்களுக்கு எந்த மோதலும் கிடையாது. இந்தப் பின்னணியில்தான், கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட 21/4 தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மையமாக சுட்டிக்காட்டப்படும் நகரம் காத்தான்குடி. கிராமம் என்றோ, நகரம் என்றோ முழுதாகச் சொல்லிவிடமுடியாத ஒரு பிரதேசம் இது.
 
கிழக்கிலங்கையின் இஸ்லாமிய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பல மதக் கருத்துகள், சமீப காலத்தில் இந்த இடத்திலிருந்துதான் பெரும்பாலும் உருவெடுத்தன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம்: பிசுபிசுத்ததா 3வது அணி?