Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரக்கணக்கான வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கான காரணம் என்ன? – வியக்க வைக்கும்

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:17 IST)
நாய், பூனை, கிளி போன்ற செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்த்து பார்த்திருப்போம். ஆனால் புதுச்சேரியில் ஒரு மனிதர் ஆயிரக் கணக்கான வெளவால்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
 
புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரபு பொன்முடி, விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத பற்று கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாக கடந்த 21 ஆண்டுகளாக இவரது வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.
 
சூழலியல் ரீதியாக வௌவால்கள் மிக முக்கியமான இனம் என்பதால் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மனிதர்களுக்கு இருப்பதாக இவர் கருதுகிறார்.
 
பொதுவாக வௌவால்கள் குறித்து தவறான புரிதல் மக்களிடையே இருக்கிறது. பறவைகள், மற்ற விலங்கினங்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வௌவால்களுக்கு மனிதர்கள் கொடுப்பதில்லை என்கிறார் பிரபு பொன்முடி.
 
"பழங்காலத்து கோயில்களில் வௌவால்கள் அதிகமாக பார்க்க முடியும். ஆனால் தற்போது கோயில்களை புனரமைப்பு செய்து அவைகள் வாழ இடமில்லாமல் அழித்துவிட்டனர்.
என்னைப் பொறுத்தவரை அனைத்து விலங்கினங்களையும் ஒரே மாதிரியாக பார்த்து வருகின்றேன். உலகில் வாழ்வதற்கு மனிதர்களுக்கு எப்படி உரிமை உள்ளதோ, அதே போல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமை உள்ளது," என்கிறார்.
 
தலைமுறை தலைமுறையாக வாழும் வௌவால்கள் கூட்டம்
 
"20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வீட்டின் ஒரு பகுதியில் நீச்சல் தொட்டி கட்டினோம். அப்போது நீச்சல் தொட்டியைச் சுற்றியிருந்த பராமரிப்பு அறையில், 'Dusky Leaf-nosed Bats' என்று அழைக்கப்படும் பூச்சி தின்னி வௌவால்கள் தங்க தொடங்கின.
 
பராமரிப்பு வேலைகள் தவிர்த்து அந்த அறையை வேறெதற்கும் உபயோகப்படுத்தவில்லை. அதனால் அந்த இடத்தில் வௌவால்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்க ஆரம்பித்தன. நாங்கள் இருக்கும் பகுதியும், வௌவால்கள் இருக்கும் பகுதியும் தனித் தனியாக இருப்பதால், வீட்டில் உள்ளவர்களுக்கும், வௌவால்களுக்கும் எந்த தொடர்பு இருக்காது.
 
அவைகள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து வெளியே சென்றுவர ஏதுவாகச் சிறிய இடைவெளி விடப்பட்டது. அதன் வழியாக அவைகள் இரவு நேரங்களில் எந்த இடையூறும் இல்லாமல் வெளியே சென்றுவரும்.
 
இப்படியே இங்கு தங்கும் வௌவால்களின் கூட்டம் படி படியாக அதிகரித்தது. தற்போது பெரிய வௌவால்கள், குட்டிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இங்கே தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. பெரும்பாலும் இவைகள் வீட்டிற்குள் வராது. அப்படியே ஒன்றிரண்டு வீட்டிற்குள் வந்தால் கூட திரும்பச் சென்றுவிடும்," என்கிறார் அவர்.
கண்களுக்கு விருந்தளிக்கும் வௌவால்கள்
 
நாங்கள் வௌவால்களை எப்போதாவது பார்க்க விரும்பினால் அவைகள் இருக்கும் குகை கதவை திறந்து பார்ப்பதுண்டு. வீட்டில் இருப்பவர்களும், குழந்தைகளும் வௌவால்கள் குடும்பம் குடும்பமாக தனது குட்டிகளுக்குப் பாலூட்டிக்கொண்டு இருப்பதையும், பறந்து திரிவதையும் பார்த்து அவ்வப்போது ரசிப்பதுண்டு என்கிறார்.
 
மேலும் வீட்டில் வௌவால்கள் மட்டுமின்றி பறவைகளும் இருப்பதால், அவைகள் நீர் அருந்துவதற்காக வீட்டைச் சுற்றி தண்ணீர் தொட்டிகளை பிரபு வைத்துள்ளார். அதில் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக வௌவால்கள் நீரருந்தி செல்லும் காட்சி கண்களுக்கு விருந்தாக இருக்கும். இவை அனைத்தின் மூலமாக ஒரு ஆரோக்கியமான வாழ்வை வௌவால்கள் வாழ்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
"எங்களுக்கு வௌவால்களால் நிறையப் பலன்கள் உள்ளது. மற்ற பகுதியில் கொசுத்தொல்லைகள் அதிகமாக இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் மரம், செடி, கொடிகள் என அடர்ந்து இருந்தாலும் கொசுத்தொல்லை இல்லை. கொசு மட்டுமில்லாமல் பிற சிறிய பூச்சிகளை வௌவால்கள் உண்பதால் தாவரங்கள் அனைத்துமே பூச்சி பாதிப்புகள் இல்லாமல் செழுமையாக இருக்கின்றன.
 
மேலும் வௌவால்கள் எச்சத்தை (guano) இங்குள்ள தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்துகிறேன். தாவரங்கள் மற்றும் பயிர்களுக்கு வௌவால்களின் எச்சத்தை விட சிறந்த உரம் இந்த உலகில் வேறு ஏதும் கிடையாது. ஆகவே எனக்கு இவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
 
நகர வாழ்க்கை முறையில் இது புது விஷயமாக தெரியலாம். ஆனால் 50 ஆண்டுகள் பின்நோக்கி பார்த்தால், பெரும்பாலும் ஓட்டு வீடுகளாக தான் இருந்தன. அந்த வீடுகளில் பயன்படுத்தாத சில பகுதிகள், அறைகள், கிடங்குகளில் எப்போதுமே வௌவால்கள் கூட்டம் தங்கியிருக்கும். அந்த காலத்தில் நாம் அனைவருமே அவைகளுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள் தான்.
 
தற்போது நகரமயமாவதால் வௌவால்கள் தங்குவதற்கான இடம் இல்லாமல் போய்விட்டன. தற்போது நம்மை பற்றி மட்டுமே யோசிக்கிறோமே தவிர, நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை வளங்கள், பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கு ஆதரவு கொடுத்து வாழவேண்டும் என்பதை மறந்துவிட்டோம். அனைத்து உயிரினங்களோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதற்காகவே வீட்டில் வௌவால்கள், பறவைகள் என அனைத்திற்கும் அடைக்கலம் கொடுத்து வாழ்கிறோம்," எனத் தெரிவிக்கிறார் பிரபு பொன்முடி.
 
வௌவால்கள் பற்றி விலங்குகள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்?
 
உலகிலேயே வௌவால்கள் மட்டுமே பறக்கும் பாலூட்டி இனம். வௌவால்கள் பற்றிய நிறைய தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருப்பதாக கூறுகிறார் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆர்வலர் சி.விமல் ராஜ்.
 
"நமது கலாசாரத்தில் வௌவால்கள் பற்றி யாரும் தவறாக கூறியதில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் வௌவால்களை திரைப்படங்களில் காட்டேரி (vampires) போல சித்தரித்து மக்களிடையே தீங்கு செய்ய கூடிய மிருகம் போல மாயையும், பயத்தையும் உருவாக்கிவிட்டனர்.
 
மேலும் சமீப காலத்தில் வௌவால்கள் நோய்களைப் பரப்புவதாக தவறான வதந்திகளும் பரப்பப்படுகின்றன. இதனால் வௌவால்களை அழிக்கும் வேலையில் பலர் ஈடுபடுகின்றனர். ஆனால் வௌவால்களால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் நேராது. அவைகள் நிறைய விதத்தில் மனிதர்களுக்கு அதிக பயனளிக்கிறது," என்கிறார் அவர்.
 
வௌவால்கள் விவசாயிகளின் நண்பன்
 
"பாம்பு, மண் புழுக்களை போன்று வௌவால்களும் விவாசாயிகளுடைய பெரிய நண்பன் என்றே கூறலாம். விவசாயிகளுக்கு பூச்சிக்களால் நிறைய இழப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்துப் பூச்சி இனங்கள் தான் அதிகமாக பயிர்களை நாசம் செய்கிறது. இந்த வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வௌவால்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அந்துப் பூச்சிகள் இரவில் பறக்கக்கூடியது. அதே போன்று வௌவால்களும் இரவில் பறக்கக்கூடியது என்பதால், அந்து பூச்சுகளை வௌவால்கள் அதிகமாக உண்கிறது.
 
இதையடுத்து கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில், மனிதர்களுக்கு பெருமளவு வௌவால்கள் உதவுகிறது. கொசுக்களால் ஏற்படக் கூடிய பல்வேறு நோய்த்தொற்றுகளால், மனிதர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். அந்த விதத்தில் கொசுக்களை அதிகளவில் வௌவால்கள் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக ஒரு வௌவால் ஒரு மணி நேரத்தில் சுமார் ஆயிரம் கொசுக்களை உண்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
இந்த வௌவால்கள் அதிக அதிர்வெண் ஒலி அலைகளை (High Frequency sound waves) உருவாக்க கூடியது. இதனால் மற்ற பூச்சி இனங்கள் வௌவால்கள் இருக்கும் பகுதியை நெருங்க பயப்படும். அதனால் நம் வீட்டின் அருகே வௌவால்கள் இருக்கும்போது பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தொல்லை கட்டுப்பாட்டில் இருக்கும்," என்று தெரிவிக்கிறார் விமல் ராஜ்.
 
காடுகளை அதிக அளவில் பரப்புகிறது
 
"மேலும் காடுகள் உருவாகுவதற்கு விதைகளைப் பரப்ப வௌவால்கள் மிக முக்கியமான வேலைகளைச் செய்கிறது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் நிறைய காடுகளை வெட்டி காலி செய்த போது, அந்த பகுதியில் காடுகள் உடனே உருவாக தொடங்கியது. எப்படி காடுகள் உருவானது என்று வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், சுமார் 90 சதவீத காடுகள் வௌவால்கள் பரப்பிய எச்சத்தின் மூலம் உருவானது என கண்டறியப்பட்டது.
 
மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளைக் காட்டிலும் காடுகளைப் பராமரிப்பதில் வௌவால்களின் பங்கு பெருமளவு இருக்கிறது. அதிலும், மகரந்த சேர்க்கை செய்வதில் வௌவால்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில வகையான மரங்கள் மற்றும் தாவரங்கள் மகரந்த சேர்க்கை செய்வதற்கு வௌவால்களை மட்டுமே நம்பியுள்ளது," என்கிறார்.
 
வௌவால்களை பாதுக்காக்க வேண்டும்
 
"வௌவால்கள் வருடத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுத்து வளர்க்கக் கூடியது. மற்ற விலங்கினங்கள் மற்றும் பறவைகள் போல ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஒரே நேரத்தில் ஈன்றெடுப்பதோ அல்லது குறைந்த காலத்தில் கருத்தரித்து குட்டியை ஈன்றெடுக்கவோ இவைகளால் முடியாது.
 
ஆகவே வௌவால்களை அழித்தால், மீண்டும் இவைகளை இனப்பெருக்கம் செய்து பெருமளவு பெருக்குவது என்பது கடினமான ஒன்றாகும். ஆகவே வௌவால்களை அழிக்காமல், அவைகளின் நன்மை கருதிப் பாதுகாப்பது மிக மிக முக்கியம்," என விலங்குகள் மற்றும் பறவைகள் ஆர்வலர் சி.விமல் ராஜ் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments