Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு

Advertiesment
இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (09:36 IST)
2019ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாயின. இது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால், நாடு 2,60,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பையும் சந்தித்துள்ளது.
 
இந்த தகவல் மத்திய அரசு அமைப்பான ஐ.சி.எம்.ஆரின் அறிக்கையில் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
 
டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் மற்றும் பிகார் வரை இந்தியாவின் பெரும்பகுதி நீண்ட காலமாக கடும் காற்று மாசுபாட்டின் பிடியில் உள்ளது.
 
மழைக் காலம் தவிர்த்து, ஹரியாணா, உத்தர பிரதேசம், டெல்லி, பிகார் போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 
இந்த செய்தி எழுதப்படும் நேரத்தில், மாசுபாட்டின் அளவைக் குறிக்கும் பி.எம் 2.5 குறியீடு 462 ஆக இருந்தது, இது 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
 
இதே PM 2.5 குறியீடு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 17, நியூயார்க்கில் 38, பெர்லினில் 20, பெய்ஜிங்கில் 59 ஆகும்.
 
அதாவது, டெல்லியில் இருந்து லக்னோ வரை வாழும் மக்கள், தற்சமயம் சுவாசிக்கும் காற்று ஆரோக்கியமானவர்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே உண்மை
 
காற்று மாசால் உயிரிழப்பா?
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 16.7 லட்சம் பேர் உயிரிழந்ததற்குக் காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
1990ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் வீட்டின் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் 64 சதவீதம் குறைந்துள்ளதாகவும், வெளிக் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 115 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
மேலும், மக்களின் மரணம், அவர்களின் நோய்கள் மற்றும் மாசுபட்ட சூழலில் அவர்கள் வாழும் காலம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
 
நுரையீரல் நோய்களில் நாற்பது சதவீதம் காற்று மாசுபாடு காரணமாகவே உள்ளதாகவும் இஸ்கிமிக் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளின் அகால மரணம் ஆகியவற்றிற்கு 60% வரை காற்று மாசுபாடே காரணமாகும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுவதாக, ஐ.சி.எம்.ஆர் தலைமை இயக்குநர் பால்ராம் பார்கவா குறிப்பிட்டதை ஆங்கில நாளேடு தி ஹிந்து வெளியிட்டுள்ளது.
 
காற்று மாசுபாடு தீங்கு விளைவிக்கும் என்றும் ஆபத்தானது என்றும் ஒரு அறிக்கை கூறுவது இது முதல் முறை அல்ல. ஆனால் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த சரியான புள்ளிவிவரங்களை அரசாங்கம் பொதுவெளியில் வைத்திருப்பது இதுவே முதல் முறை.
 
இதே நிலை தொடர்ந்தால், 2024 க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவு, இறப்பு, நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் காரணமாக உடைக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
இத்தகைய சூழ்நிலையில், இந்த அறிக்கை ஒரு வெகுஜன இயக்கத்திற்கு வழிவகுக்குமா அல்லது மற்ற அறிக்கைகளைப் போல மறக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
 
இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா?
 
டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையின் நுரையீரல் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அரவிந்த்குமார், காற்று மாசுபாட்டின் அபாயங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்.
 
"ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் காற்று மாசுபாட்டின் அபாயங்கள் தெளிவாகத் தெரிந்தவுடன், அரசாங்கம் தங்களுக்கு ஒரு சிறந்த நகரத்தை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோர வேண்டும். ஆனால் மக்கள் இதைச் செய்வார்களா என்று நீங்கள் கேட்டால், எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் அது ஒரு அறிக்கை மட்டுமே. பல அறிக்கைகளைப் போலவே, கட்டுரைகள் சில நாட்களுக்கு செய்தித்தாள்களில் வெளியிடப்படும், விவாதங்கள் நடைபெறும், சில காலம் கழித்து சில புதிய விஷயங்கள் வரும். எங்காவது ஒரு விபத்து நடக்கும், இந்த அறிக்கை வரலாற்றின் பக்கங்களிலும் பதிவு செய்யப்படும். இங்கே தான் மருத்துவர்களின் மிக முக்கியமான பங்கு இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த அறிக்கையை 'தூய்மையான காற்றுக்கான மருத்துவர்கள் இயக்கத்தில்' தொடர்புள்ள எங்கள் மருத்துவர்களிடையே பகிர்ந்து கொண்டேன். அவர்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தினமும் காற்று மாசுபாட்டின் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளேன்." என்று அவர் தெரிவித்தார்.
 
காற்று மாசு அத்தனை மோசமானதா?
இந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஆபத்து எவ்வளவு தீவிரமானது என்பதை உணர ஒரு புள்ளிவிவரத்தைக் கூறலாம். 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சாலை விபத்துகள், தற்கொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகம்.
 
2019ல் 18 சதவீத இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர் அறிக்கை கூறுகிறது.
'
இத்தகைய சூழ்நிலையில் கூட, அரசாங்கமும் சமூகமும் சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், வரவிருக்கும் ஆண்டுகளில் காற்று மாசுபாடு ஒரு மாபெரும் சவாலாக உருவாகும் என்று டாக்டர் அரவிந்த் உறுதியாகக் கூறுகிறார்.
 
"காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கீழ் மட்டத்தில் நாம் சில நடவடிக்கைகளை எடுத்தால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தீர்வைக் காணலாம்" என்று கூறுகிறார் அவர்.
 
"நமது உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செய்யும் விதத்தில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்." சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே விடப்படுவதும் அதனால் கிளம்பும் தூசியும் காற்றை மாசுபடுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன" என்று அவர் கூறுகிறார்.
 
"இந்த சிக்கலின் தீவிரம் மெதுவாக அதிகரித்து வருகிறது. முன்னதாக 50-60 வயது நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டதைப் பார்த்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு, 45 வயதான ஒருவர் நுரையீரல் புற்றுநோயுடன் எய்ம்ஸுக்கு வந்தபோது, ​​எனக்குள் அபாய மணி அடித்தது. இந்த இளம் வயதில் எப்படி புற்று நோய் வந்தது என்று நான் அதிர்ந்தேன். இப்போது கங்காராம் மருத்துவமனையில் எனது நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளில் மிகவும் இளம் வயது வெறும் 28 வயது." என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் அவர்.
 
மேலும், டாக்டர் அரவிந்த், "ஒரு பெண்ணுக்கு 28 வயதில் எப்படி நுரையீரல் புற்றுநோய் வந்தது என்பது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்? ஏனென்றால் அவர், காற்று மாசு அதிகம் உள்ள இடத்தில் பிறந்தார். அதாவது, அவர் தனது வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாசுபட்ட காற்றையே சுவாசித்து வந்துள்ளார். சிகரெட்டுகள் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன என்று கூறுகிறோம்.
 
டெல்லியில் பி.எம் 2.5 குறியீடு 300 ஆக இருந்தால், டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 15 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், காற்று மாசுபாட்டின் அபாயத்தை புரிந்து கொள்ள முடியும். இதில் புதிதாகப் பிறந்த குழந்தைகளும் அடங்கும்.
 
இத்தகைய சூழ்நிலையில், அத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் 25 முதல் 30 ஆண்டுகள் டெல்லியில் கழிக்கும் போது, ​​அவர்கள் 25-30 ஆண்டுகள் புகைப்பிடிப்பவர்களாகவே கருதப்படலாம். அவர்களின் திசுக்கள் புற்றுநோயைப் பெற தயாராகி விடும்.
 
நாடு முழுவதும் உள்ள நுரையீரல் புற்றுநோய் நிபுணர்களில் பெரும்பாலோர் தங்கள் நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் புகைப்பிடிக்காதவர்கள் என்று கூறுகின்றனர். அவர்களிடையே பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
டாக்டர் அரவிந்த் விளக்குகிறார், "இளைஞர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நிலைமை மேம்படவில்லை என்றால், நுரையீரல் புற்றுநோய் ஒரு மாபெரும் சவாலாக இருக்கும்"
 
டாக்டர் அரவிந்த் உட்பட நாட்டின் பல வல்லுநர்கள் காற்று மாசுபாட்டின் அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியம், அவசரம் என்றே கருதுகின்றனர்.
 
ஆனால் காற்று மாசுபாடு குறித்து மக்கள் தீவிரமாக இல்லை என்பது முற்றிலும் உண்மையா? கடந்த சில ஆண்டுகளில் காற்று சுத்திகரிப்பான்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளதால், இந்த அபாயத்தை மக்கள் இதனை உணர்ந்துள்ளனர் என்றே தெரிகிறது.
 
ஆனால் ​​இந்தப் பிரச்சினையின் தீர்வைத் தனி நபர் மட்டத்தில் காண முடியுமா என்று ஒரு புதிய கேள்வியும் எழுகிறது.
 
காற்று சுத்திகரிப்பான்கள் தீர்வாகுமா?
 
தற்போது, ​​ரூ .3,000 முதல் ரூ .1 லட்சம் வரை காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன, ஆனால் எய்ம்ஸ் நுரையீரல் துறைத் தலைவர் டாக்டர் அனந்த் மோகன் இந்தப் பிரச்னைக்கு இது தீர்வாகாது என்று கூறுகிறார்.
 
அவர் கூறுகிறார், "மக்கள் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க விரும்பினால், அவர்கள் முதலில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்."
 
அதே நேரத்தில், டாக்டர் அரவிந்த் காற்று மாசுபாடு ஒரு மக்கள் பிரச்சனை என்றும் அதன் தீர்வு தனி நபர் மட்டத்தில் காணப்படக்கூடாது என்றும் கூறுகிறார்.
 
"காற்று சுத்திகரிப்பான்களில் காற்று மாசுபாட்டிற்கான தீர்வுகளைக் கண்டறிவது மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய மக்கள் இன்வெர்ட்டர்களைப் பயன்படுத்தியது போன்றது. போதுமான மின்சாரம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.
 
இந்தப் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதைச் செய்யவில்லை, மக்கள் இந்தப் பிரச்சினைக்குத் தாங்களாகவே ஒரு தீர்வைக் கண்டனர். ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வெர்ட்டர்களை அவர்கள் வீடுகளில் வைக்கத் தொடங்கினர். ''
 
"பிரச்னைக்கு சரியான தீர்வு, அதிக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் மூலம் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படுவதாகும். ஏனென்றால் மக்கள் இதற்கு நிறைய பணம் செலவிட்டார்கள். இது பவர் ஹவுஸில் நிறுவப்பட்டிருந்தால், மக்கள் குறைந்த விலையில் நல்ல மின்சாரம் பெறுவார்கள். ஆனால் அது நடக்கவில்லை. ''
 
"பொதுமக்களின் அதே அணுகுமுறை நீர் விஷயத்திலும் காணப்பட்டது. அரசாங்கம் சுத்தமான தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். அரசாங்கத்தால் அதை கொடுக்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நகரத்தின் நீர் விநியோகத்தைச் சுத்தம் செய்வதற்கு பதிலாக, மக்கள் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கத் தொடங்கினர். பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் குடிக்கத் தொடங்கினார்கள்." என்று கூறுகிறார் டாக்டர் அரவிந்த்.
 
தனிப்பட்ட மட்டத்தில் ஒரு பொதுப் பிரச்சினைக்கு மக்கள் தீர்வு கண்டதற்கு இவை இரண்டும் எடுத்துக்காட்டுகள். மேலும் தீர்வும் காணப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு தேர்தலை அடிப்படையாகக் கொண்டது.
 
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டுமானால், உங்களுக்குத் தாகமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சுத்தமான தண்ணீருக்காக ஒரு மணி நேரம் கூட காத்திருக்கலாம்.
 
இதனால் உயிர் போய் விடாது. ஆனால் காற்றின் நிலை அப்படி அன்று. மூன்று நிமிடங்களுக்கு மேல் சுவாசிக்காமல் நாம் வாழ முடியாது. இந்த விஷயத்தில், இந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தனிப்பட்ட மட்டத்தில் காண முடியாது.
 
ஆனால் இந்த பிரச்சினைக்கான தீர்வை தனிப்பட்ட மட்டத்தில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?
 
சாதாரண மக்கள் என்ன செய்வர்?
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் அனுமிதா ராய் சௌத்ரி, "இந்தப் பிரச்னை குறித்து எந்த அளவுக்கு பேசுகிறோமோ, அதே அளவு விழிப்புணர்வும் தீர்வும் இருக்க வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் கண்டிப்பாக இருக்கும். அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் இந்தக் கடினமான நடவடிக்கைகளுக்கு நம்மால் ஆதரவைத் திரட்ட முடியாவிட்டால், இந்த பிரச்சினைக்கான தீர்வை அறிந்தும் அதை செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்." என்று கூறுகிறார்.
 
"டெல்லியில் காற்று மாசு குறித்து நாம் பேசுகிறோம். இதற்கான தீர்வாக, தனியார் வாகனங்களைத் தடைசெய்து பொது போக்குவரத்தை அதிகரிக்க விரும்புவதாக அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்வைத்தபோது,​​ நடுத்தர வர்க்கம் அரசாங்கத்திற்கு எதிராகச் சென்றது. இப்போது, பல் துறை தூய்மையான காற்று செயல் திட்டம் பற்றிய பேச்சு உள்ளது. தூய்மையான காற்றுக்கான ஒரு தேசிய திட்டம் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் வாகனங்கள், தொழில், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கட்டட கட்டுமானம் மற்றும் குப்பைகளை எரிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதுடன் கடுமையான நடவடிக்கைகளுக்குத் தயாராகவும் இருக்க வேண்டும். " என்று அனுமிதா கூறுகிறார்.
 
காற்று மாசு சட்டங்கள் இந்தியாவில் உள்ளனவா?
இந்த கேள்வியுடன், மாசுபாடு குறித்த விவாதம் திவிரமடைகிறது. ஏனெனில் ஒரு நபர் உங்களுக்கு உடல் அல்லது மன மட்டத்தில் தீங்கு செய்தால், இந்திய சட்டத்தின் கீழ், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படலாம்.
 
ஆனால் மாசு விஷயத்தில் அவ்வாறு செய்ய முடியுமா? மாசு ஏற்பட்டால் எந்தவொரு நபர், நிறுவனம் அல்லது அரசு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியுமா?
 
கடந்த 10 ஆண்டுகளாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட சிக்கல்களில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் விக்ராந்த் தோங்கட், காற்று மாசுபாடு விஷயத்தில் அவ்வாறு செய்வது சற்று கடினம் என்று கூறுகிறார்.
 
"காற்று மாசுபாடு ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் ஒரு நோயாளிக்கு ஏற்படும் ஒரு இழப்புக்கான காரணம் பதிவு செய்யப்படும் போது, ஒரு நோயின் பெயர் தான் குறிப்பிடப்படுகிறதே அன்றி, மாசு ஒரு காரணமாகப் பதிவு செய்யப்படுவதில்லை. பிரிட்டனில் ஏழு ஆண்டுகால சட்டப் போருக்குப் பிறகு, ஒரு பெண் குழந்தையின் மரணத்திற்குக் காற்று மாசுபாட்டை நீதிமன்றம் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதுபோன்ற வழக்குகள் இந்தியாவில் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
 
இந்தியாவில் காற்று மாசுபடுவதைத் தடுக்க 1981 ஆம் ஆண்டில் ஒரு காற்றுச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் எவ்வளவு வலுவானது என்றால், கடந்த 40 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதேசமயம் கடந்த 40 ஆண்டுகளில், இந்திய நகரங்களில் காற்று மாசுபாடு ஒரு தீவிர நிலையை எட்டியுள்ளது. .
 
இத்தகைய சூழ்நிலையில், காற்று மாசுபாடு தொடர்பாக நீதித்துறை மட்டத்தில் குறை தீர்க்கும் செயல்முறை எளிதானது மற்றும் விரைவானது அல்ல, அரசிடமே இது குறித்த ஒரு அலட்சியம் இருக்கிறது, பின்னர் பொது மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?
 
காற்று மாசுபாடு பிரச்சினை தேர்தல் அரசியலுடன் இணைக்கப்படும் வரை அரசாங்கத்திடமிருந்து செயல்பாட்டை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று அனுமிதா ராய் சவுத்ரி நம்புகிறார்.
 
"சுத்தமான காற்றைப் பெறுவது ஒரு பெரிய பிரச்சினை என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அது ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட வேண்டும். இந்த பிரச்சினை மக்களுக்கு முக்கியமானது என்பதை அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளும்போதுதான் இந்த தேர்தல் பிரச்சினை சரி செய்யப்படும். " என்று அவர் கூறுகிறார்.
 
"ஏனெனில் கடந்த சில நாட்களில், முற்போக்கான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் பல மட்டங்களில் செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவை கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதற்கு, அரசியல் பிரச்சினையாக இது மாற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில்​​அரசாங்கங்கள் சரியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்போது, ​​இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பொதுமக்களின் ஆதரவைப் பெறும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள். "

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் சாணம் போட்ட எருமைக்கு 10 ஆயிரம் அபராதம்! – மத்திய பிரதேசத்தில் விசித்திர சம்பவம்!