Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோல் வெண்மை கிரீம்களை பயன்படுத்தினால் என்ன பாதிப்பு? - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

Advertiesment
sklin
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:44 IST)
சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் ரசாயனம் போன்று செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை (களிம்பு) பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற தயாரிப்புகளை 'எந்த வகையிலும்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டனின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எல்ஜிஏ எனும் உள்ளூர் நிர்வாக அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
 
பறிமுதல் செய்யப்பட்ட பல களிம்புகளில் வெளுத்துப்போக செய்யும் ரசாயனமான ஹைட்ரோகுவினோன் இருந்தது. இதுபோன்ற களிம்புகளில் சில சமயம் பாதரசமும் இருக்கலாம்.
 
தங்களது சருமம் குறித்து ஏதாவது கவலைகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமென்று பிரிட்டிஷ் ஸ்கின் பவுண்டேஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதுபோன்ற ஆபத்துமிக்க களிம்புகள் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி இணையதள வணிக நிறுவனங்களினாலும், சந்தையிலும் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், களிம்புகளை தயாரிக்கும் போது அதில் கலக்கப்படும் ரசாயனங்களின் அளவில் கவனக்குறைவாக மாற்றப்படும் அளவும் நுகர்வோருக்கு உடல்நலம் ரீதியிலான பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
 
சருமத்தை வெண்மையாக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் இதுபோன்ற தயாரிப்புகளில் இருக்கும் ஹைட்ரோகுவினோன், சுவரிலிருந்து வண்ணப்பூச்சுகளை நீக்கும் ரசாயனத்துக்கு இணையானது என்று எல்ஜிஏ அமைப்பு எச்சரிக்கை எடுத்துள்ளது. அதாவது, ஹைட்ரோகுவினோன் கலக்கப்பட்ட களிம்புகளை உபயோகிப்பது சருமத்தின் மேல் அடுக்கையே நீக்குவதால், அதைத்தொடர்ந்து தோல் புற்றுநோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம். அதே போன்று, பாதரசம் கலக்கப்பட்ட களிம்புகளும் இதே போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
 
ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே, கடுமையான பக்க விளைவுகள் கொண்ட ஹைட்ரோகுவினோன், ஸ்டெராய்டுகள் அல்லது பாதரசம் கொண்ட களிம்புகள் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
 
"தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தோல் களிம்புகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்து நிறைந்தது. அது உங்களின் தோலை சேதப்படுத்துவதோடு, நோய்கள் ஏற்படவும், மோசமான சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட காரணமாகிறது. எனவே, எந்த வகையிலும் இதுபோன்ற களிம்புகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்" என்று கூறுகிறார் பிரிட்டனின் எல்ஜிஏ அமைப்பின் மக்கள் நலப்பாதுகாப்பு பிரிவின் தலைவர் சைமன் பிளாக்பர்ன்.
 
"நுகர்வோர் எப்போதும் தங்களது சருமத்தில் பயன்படுத்தும் களிம்புகளின் உட்பொருட்களை சரிபார்க்க வேண்டும். மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் களிம்புகளின் மீது சந்தேகம் கொள்ளுங்கள். சராசரி விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் களிம்புகள் போலியானதாகவோ அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்களை கொண்டதாகவோ இருக்கும். ஆனால், ஹைட்ரோகுவினோன் கொண்ட களிம்புகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
 
ஒருவேளை நீங்கள் வாங்கும் தயாரிப்பில் அதில் கலக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்த விளக்கம் தரப்படாவிட்டால் அதை வாங்காமல் இருப்பதே நல்லது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
சருமத்தை வெண்மையாக்கும் களிம்புகள் ஏற்படுத்தும் தீங்குகள் குறித்த விவகாரம் ஒவ்வொரு ஆண்டும் பூதாகரமாகி வருவதாக கூறுகிறார் பிரிட்டிஷ் ஸ்கின் பவுண்டேஷனை சேர்ந்த லிசா பிகர்ஸ்டாஃப்.
 
"இந்த விவகாரம் மீண்டும் மீண்டும் உருவெடுப்பதற்கு சட்டவிரோதமான வழிகளில் இதுபோன்ற களிம்புகள் இணையதளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவது மட்டுமே காரணமா என்பதை உறுதிசெய்வது கடினம்.
 
உங்களது தோலுக்கு மட்டுமின்றி உடல்நிலைக்கே அதீத தீங்கு விளைவிக்கக் கூடிய இதுபோன்ற களிம்புகள் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகவும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் மாவட்டத்தினை தமிழக அளவில் பசுமையாக்க புதிய வியூகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அசத்தல்