Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

V5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன? ஆ. ராசா குற்றம்சாட்டுவது ஏன்?

V5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன? ஆ. ராசா குற்றம்சாட்டுவது ஏன்?
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (21:32 IST)
இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவைத் துறைக்கான 5 ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால், அரசு எதிர்பார்த்ததைவிட குறைவான தொகையே கிடைத்திருப்பதால் முறைகேடு நடந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா.
 
இந்திய தொலைத்தொடர்பு சேவைக்கான 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த வாரம் துவங்கி இந்த வாரம் திங்கட்கிழமையன்று நிறைவடைந்தது. ஏழு நாட்களாக நடந்த ஏலத்தில் 40 சுற்றுகளில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. 4 ஜி சேவையைவிட 5 ஜி சேவையில் இணையத்தை பத்து மடங்கு வேகத்தில் பயன்படுத்த முடியும்.
 
இதில் ஜியோ நிறுவனம் ஒட்டுமொத்தமாக 24,740 MHz அலைக்கற்றைகளை 88,078 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 19,867.8 MHz அலைக்கற்றைகளை 43,084 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. நிதிச் சிக்கலில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, 6,228 MHz அலைக்கற்றைகளை 18,799 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. புதிய நிறுவனமான அதானி டேடா நெட்வொர்க்ஸ் தனது நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக 400 MHz அலைக் கற்றையை 212 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.
 
இந்த அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு பேசிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த ஏலத்திலிருந்து 80,000 கோடி ரூபாய் முதல் 1,00,000 கோடி ரூபாய் வரை எதிர்பார்த்தோம். ஆனால், இது ஆச்சரியமளிக்கிறது என்று தெரிவித்தார். இந்த ஏலம் மூலம் மொத்தமாக 1,50,173 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. விரைவில் ஏலம் எடுத்தவர்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்டோபருக்குள் இந்தியாவில் 5ஜி சேவை துவங்குமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
 
இந்த நிலையில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு, மிகக் குறைவான விலைக்கு 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தனவா என்ற கேள்வியை எழுப்பினார். மத்திய அரசும் இதில் இணைந்துகொண்டு சதி செய்கிறதா என்றும் குற்றம்சாட்டினார்.
 
2010ஆம் ஆண்டின் சிஏஜி அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஏலத்தின் காரணமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக இந்தியாவின் அப்போதைய தலைமைக் கணக்காயர் வினோத் ராய் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஆ. ராசா, அதைவிட மிக சக்திவாய்ந்த அலைக்கற்றைகளுக்கு, மிகக் குறைவான விலை கிடைத்திருப்பது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.
 
"ட்ராய் அளித்த பரிந்துரைகளின்படி நான் வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தபோது, 1,76,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறியது. ஆனால், இப்போது 51 கிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கு அதைவிட மிகக் குறைவான விலையான 1.5 லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் சென்றிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
 
"ஒரு விஷயத்தை இணையத்தில் தேடும்போது 2ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தினால், முடிவுகள் கிடைக்க 10 விநாடிகள் ஆகும். 4ஜியில் இது 5 விநாடிகளாகக் குறையும். ஆனால், 5ஜியில் இது வெறும் ஒரு விநாடியில் கிடைக்கும். அந்தத் திறனோடு ஒப்பிட்டால், 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 5 அல்லது 6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு சேர்ந்து மத்திய அரசும் இந்தச் சதியில் ஈடுபட்டதா என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டும்" என ஆ. ராசா குறிப்பிட்டார்.
 
 
வினோத் ராயையும் சட்டஅமைப்பையும் பயன்படுத்தி, ஆட்சியை மாற்றுவதற்காகவே 2ஜி விவகாரம் உருவாக்கப்பட்டது. இது குறித்து எனது புத்தகத்திலும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். வினோத் ராயிடமிருந்து இப்போதுவரை பதிலில்லை என்றும் ஆ. ராசா தெரிவித்தார்.
 
2010ஆம் ஆண்டில் இந்திய தலைமைக் கணக்காளரின் அறிக்கையில், 2ஜி அலைக்கற்றைகள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம்விடப்பட்டதால், இந்தியாவுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தொடர்புபடுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரமில்லையென்றுகூறி 2017ல் அவர்களை விடுவித்தது.
 
ஆ. ராசா மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. ட்விட்டரில் இது குறித்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மனீஷ் திவாரி, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறி, 2010 நவம்பரில் அப்போதைய சிஏஜி வினோத் ராய் இந்தியாவின் இமேஜை நாசம் செய்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதைவிட மிக மேம்பட்ட 5ஜி தொழில்நுட்பத்திற்கு அரசால் 1.5 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே பெற முடிந்திருக்கிறது. ராய் யாருடைய ஏஜென்ட்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
 
 
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, "இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலங்களிலேயே, இந்தியாவுக்கு அதிக பணம் கிடைத்தது இந்த ஏலத்தில்தான். 2ஜி ஏலத்தைப் பொறுத்தவரை, 2001ன் அடிப்படை விலையை 2008ல் ஆ. ராசா பயன்படுத்தினார். 2008ல் அலைக்கற்றை ஏலமும் தொலைத்தொடர்புத் துறைக்கான உரிமமும் விற்கப்பட்டது. ஆனால், இப்போது அலைக்கற்றை ஏலம் மட்டுமே நடந்திருக்கிறது. தவிர, அப்போது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பயன்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளில் முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இது எங்குமே நடக்காத நடைமுறை. இதற்குப் பதிலாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை ஏலம் எடுத்த நிறுவனம் அளித்தது. சிபிஐ விசாரணை துவங்கியவுடன் அந்தப் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது. அதனைக் கடன் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு 2012ல் மீண்டும் 2ஜிக்கு ஏலம் நடைபெற்றது. அப்போது 22 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், 9,400 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. 2013ல் மீண்டும் ஏலம் நடந்தபோது, 800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையைத் தவிர பிற அலைக்கற்றைகளை யாரும் ஏலம் எடுக்கவில்லை. 2014ல் நடந்த ஏலத்தில் 61,200 கோடி ரூபாய் கிடைத்தது.
 
பா.ஜ.க. வந்த பிறகு நடந்த முதல் ஏலத்தில் 1,09,000 கோடி ரூபாய் கிடைத்தது. 2021ல் நடந்த ஏலத்தில் 77,814 கோடி ரூபாய்தான் கிடைத்தது. இப்போது நடந்த 5ஜி ஏலத்தில் 1,50,000 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. ஆ. ராசா தனது கேள்வியை நாடாளுமன்றத்தில் கேட்டிருக்க வேண்டும். அவர் ஆரஞ்சையும் ஆப்பிளையும் ஒப்பிடுகிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.
 
இந்த ஏலத்தைப் பொறுத்தவரை, முதல் முறையாக 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சேவையை அளிக்க முடியும் என்பதோடு, மிக உயர்ந்த வேகம் தேவைப்படும் சேவைகளை இந்த மெகாஹெர்ட்ஸைப் பயன்படுத்தி அளிக்கலாம். கடந்த சில முறைகளில் இந்த அலைக்கற்றையை விற்க முயன்றபோது, யாரும் வாங்க முன்வரவில்லை. காரணம், அந்த காலகட்டத்தில் இந்த சேவையைப் பயன்படுத்தத்தக்க வகையில், மொபைல் போன்கள் பெரும் எண்ணிக்கையில் பயன்பாட்டில் இல்லை. ஆனால், தற்போதைய சூழலில் 700 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றையை லாபகரமாக விற்பனை செய்ய முடியுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"NaMo Meal" திட்டத்தை துவங்கிவைத்த தமிழக பா.ஜ.கவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா