Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைவானை சுற்றி வளைத்த சீனா: போர் ஒத்திகையால் பதற்றம்

Advertiesment
China  - Taiwan
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:36 IST)
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா ராணுவப் போர் பயிற்சிகளைத் தொடங்கியிருக்கிறது.


உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இந்தப் போர் ஒத்திகை தொடங்கியது. பிராந்தியத்தில் தற்போதிருக்கும் நிலையை மாற்றுவதற்கு சீனா முயற்சிப்பதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.

தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதும் தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நான்சி பெலோசி அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் அவரது பயணத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

இதற்கு பதிலடியாக, சீனா ஐந்து நாட்களுக்கு "தேவையான மற்றும் நியாயமான" ராணுவ பயிற்சிகளை நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்தது. இன்று முதல் அவை நடக்கின்றன.

27 சீன போர் விமானங்கள் ஏற்கனவே தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. அவற்றை எச்சரிக்கும் வகையில் தங்களது பதிலடி மூலம் மூலம் துரத்தியதாக தைவான் கூறியது.

அடையாளம் தெரியாத அந்த விமானங்கள் ஆளில்லா ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எச்சரிக்கையைத் தொடர்ந்து கின்மென் தீவுகளுக்கு மேல் பறந்துவிட்டதாக தைவான் கூறியது. விமானத்தை விரட்டுவதற்காக ராணுவம் குண்டுகளை வீசியதாகவும் விழிப்புடன் இருந்ததாகவும் அது கூறியது.

தைவானைச் சுற்றி வளைத்து தாங்கள் நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது. "நீண்ட தூர உண்மையான குண்டுவீச்சும்" இதில் அடங்கும் என்றும் சீனா கூறியுள்ளது.

பயிற்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை தேடுமாறு குறிப்பிட்ட கடல்வழிகளைப் பயன்படுத்தும் கப்பல்களை தைவான் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் அண்டை நாடான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுடன் மாற்று விமானப் பாதைகளைக் கண்டறியவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

"வேண்டுமென்றே அதிகரிக்கப்பட்ட ராணுவ அச்சுறுத்தல்களை" நாடு எதிர்கொள்கிறது என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறினார்.

நிலைமையைச் சாந்தப்படுத்தும் முயற்சியில், ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சீனாவின் ராணுவக் குவிப்பு பிராந்திய அமைதியைச்சீர்குலைக்கும் அபாயம் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளில் தைவானுக்குச் சென்ற மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதியாக பெலோசி கருதப்படுகிறார். தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். தைவானுக்குச் செல்ல வேண்டாம் என சீனா முன்னரே எச்சரித்தையும் மீறி இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

"ஜனநாயகம் என்ற போர்வையில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மீறுகிறது" என்று சீனா கூற்றம்சாட்டியது. "நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள், சீனாவை சீண்டுவோர் தண்டிக்கப்படுவார்கள்" என்றும் எச்சரித்தது.

ஆனால் பெலோசியின் பயணத்தை இது தடுக்கவில்லை. பயணத்துக்குப் பிறகு பெலோசி வெளியிட்ட அறிக்கையில், "உலகத் தலைவர்கள் உள்ளிட்ட எவரும் தைவானுக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது" என்று கூறினார்.

எனினும் பெலோசியின் தைவான் பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழுமையாக ஏற்கவில்லை. இரு நாடுகளுக்கும் பதற்றம் இருக்கும் நிலையில், 'இது நல்ல யோசனையல்ல' என்று ராணுவம் கருதுவதாக அவர் கூறியிருந்தார்.

தைவான் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தெளிவற்றதாகவே அமைந்திருக்கிறது. ஒருபுறம், அது ஒரு சீன அரசை மட்டுமே அங்கீகரிக்கும் "ஒரே சீனா" கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. அதே நேரத்தில் தைவானுடன் "வலுவான அதிகாரப்பூர்வமற்ற" உறவைப் பேணுகிறது. இதில் தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை விற்பது அடங்கும்.

தைவான் எங்கே அமைந்திருக்கிறது?

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான "முதல் தீவு சங்கிலி" என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.

தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

தற்போது நிலைமை மோசமடைந்து வருகிறதா?

2021-ஆம் ஆண்டில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு ராணுவ விமானங்களை அனுப்பியதன் மூலம் சீனா அதன் அழுத்தத்தை அதிகரிக்க முயன்றது.

தைவான் 2020-ஆம் ஆண்டில் விமான ஊடுருவல் பற்றிய தரவுகளைப் பொதுவில் வெளியிடத் தொடங்கியது.

அதன்படி, அக்டோபர் 2021-இல், ஒரே நாளில் 56 ஊடுருவல்கள் என்ற அளவில் சீனாவின் ஊடுருவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

பிற நாடுகளுக்கு தைவான் ஏன் முக்கியமானது?

தைவான் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.

உலகின் அன்றாட மின்னணு உபகரணங்களான கைபேசிகள், மடிக்கணினிகள், கடிகாரங்கள், கேம் கன்சோல்கள் எனப் பெரும்பாலானவை, தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன.

ஓர் அளவீட்டின்படி, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அல்லது டிஎஸ்எம்சி என்ற ஒரு தைவானிய நிறுவனம், உலக சந்தையில் பாதியைத் தன்னகத்தே வைத்துள்ளது.

டிஎஸ்எம்சி என்பது, வார்ப்பகம் என்றழைக்கப்படும், நுகர்வோர் மற்றும் ராணுவ வாடிக்கையாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை உருவாக்கும் நிறுவனம். இந்தத் துறையின் 2021-ஆம் ஆண்டு மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்.

தைவானில் சீனாவின் கையகப்படுத்தல், உலகின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று மீது பெய்ஜிங்கிற்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கலாம்.

தைவான் மக்கள் சீனா பற்றி என்ன நினைக்கிறார்கள்?

சீனாவுக்கும் தைவானுக்கு இடையே சமீபகால பதற்றங்கள் இருந்தபோதிலும், பல தைவானிய மக்கள் ஒப்பீட்டளவில் கவலையற்று உள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது.

கடந்த அக்டோபரில் தைவான் பொதுக் கருத்து அறக்கட்டளை, இறுதியில் சீனாவுடன் போர் நடக்கும் என்று நினைக்கிறீர்களா என மக்களிடையே கேட்டது. அதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் (64.3%) இல்லையென்று பதிலளித்துள்ளனர்.

தைவானில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதாக மற்றுமொரு ஆராய்ச்சி கூறுகிறது.

1990-களின் முற்பகுதியிலிருந்து தேசிய செங்ச்சி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகள், சீனர்கள் அல்லது சீனர்கள் மற்றும் தைவானியர்கள் என அடையாளம் காணும் மக்களின் விகிதம் குறைந்துள்ளது என்றும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்கள் என்றே கருதுவதாகவும் கூறுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 9ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: ஓடிடியில் நேரடி ஒளிபரப்பா?