Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு நேர்ந்தது பாகிஸ்தானுக்கும் ஏற்படுமா?

Advertiesment
Pakistan PM
, செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (23:24 IST)
பாகிஸ்தானின் மத்திய நிதியமைச்சர் இஷாக் டார், சீனாவிடம் இருந்து 700 மில்லியன் டாலர் கடனாக கிடைக்கப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தானின் குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு சிறிது அதிகரிப்பது அவரது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் சீனா மற்றும் சீன வங்கிகளில் இருந்து பெற்ற கடன்கள் இப்போது பாகிஸ்தானின் மொத்த கடனில் மூன்றில் ஒரு பங்காக ஆகி விட்டது.
 
பாகிஸ்தானின் மொத்த கடனில், கடந்த எட்டு ஆண்டுகளில் சீனா மற்றும் சீன வணிக வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைக்கு வெளிநாட்டுக் கடன்களை திரும்பச்செலுத்துவதே ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது, இதன் காரணமாக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது.
 
நடப்பு நிதியாண்டிலும், அடுத்த இரண்டு நிதியாண்டுகளிலும் பாகிஸ்தான், வெளிநாட்டு கடனாக பெரும் தொகையை திரும்பச்செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில், எட்டு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுக் கடனை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
 
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை திரும்ப அடைப்பது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். சீனா மற்றும் சீன வணிக வங்கிகளுக்கு திரும்பச் செலுத்த வேண்டிய கடனும் இதில் அடங்கும்.
 
சீனாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி, பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் மீதான ஆபத்தை நிச்சயமாகக் குறைக்கும் என்று பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால் இதனுடன், பிற நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை மறுசீரமைப்பதும் மிகவும் முக்கியமானது.
 
நடப்பு நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், பாரிஸ் கிளப்பின் உறுப்பு நாடுகள் வழங்கிய கடனின் விகிதம் பாகிஸ்தானின் மொத்தக் கடனில் பெரும் பகுதியாக இருந்தது. ஆனால் கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில், சீனா வழங்கிய கடன் மிக அதிகமாக உள்ளது. இதனுடன் சீன வங்கிகளின் கடனும் பெருமளவு அதிகரித்துள்ளது.
 
சீன கடன் அதிகரிப்புக்கு பாகிஸ்தான்-சீனா பொருளாதார வழித்தடமும் (CPEC) ஒரு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இதில் சீனாவிடமிருந்து எரியாற்றல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வடிவில் பணம் பெறப்பட்டது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சீன வணிக வங்கிகளிடமிருந்தும் கடன் பெறப்பட்டது.
 
இதற்கு சமீபத்திய உதாரணம் சீன வளர்ச்சி வங்கியின் 700 மில்லியன் டாலர் கடன். அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க இது உதவும் என்று இது குறித்து நிதியமைச்சர் இஷாக் டார் கூறினார்.
 
ஆனால், பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கலுக்கு இந்தக் கடன்தான் உண்மையான காரணமா என்ற கேள்வி எழுகிறது.
 
இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய நிபுணர்களிடம் பிபிசி பேசியது. பாகிஸ்தான் நிதி அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும்கூட இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
 
நிதியமைச்சர் இஷாக் தார், நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஆயிஷா கவுஸ் பாஷா மற்றும் நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் இது தொடர்பாக செய்யப்பட்ட அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
 
பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடன் தற்போது 97 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. இதில் சர்வதேச நிதி நிறுவனங்கள், பல்வேறு நாடுகள், வெளிநாட்டு வணிக வங்கிகள் மற்றும் சர்வதேச பத்திரச் சந்தை ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடன்களும் அடங்கும்.
 
இந்த கடனில் பாரிஸ் கிளப், ஐஎம்எஃப், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன்களும் அடங்கும் என்று பாக்கிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது.
 
கடந்த ஏழு ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன்களை பார்க்கும்போது, 2015ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% ஆக இருந்த வெளிநாட்டு கடன், 2022ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஆக அதிகரித்துள்ளது.
 
பாகிஸ்தானின் மொத்த கடனில் சர்வதேச நிதி நிறுவனங்கள், பிற நாடுகள் மற்றும் வணிக வங்கிகள் வழங்கிய கடன்களும் அடங்கும், ஆனால் பாகிஸ்தான் அரசு மற்றும் மத்திய வங்கியின் அறிக்கைகளில், அந்தக் கடன்கள் 'பாரிஸ் கிளப்' மற்றும் 'பாரிஸ் அல்லாத கிளப்' ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொடர்பாக எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடப்படுவதில்லை.
 
இருப்பினும் சர்வதேச செலாவணி நிதியம் கடந்த மறுஆய்வுப் பணிக்குப் பிறகு சமர்ப்பித்த பாகிஸ்தானின் கடன் விவர அறிக்கையில், பாகிஸ்தானின் மொத்தக் கடனில் சீனாவின் பங்கு 30% ஆக இருந்தது.
 
சீன அரசு இதுவரை 23 பில்லியன் டாலர் கடனை வழங்கியுள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் கூறுகிறது. அதே நேரம் சீன வணிக வங்கிகள் இதுவரை சுமார் 7 பில்லியன் டாலர் கடனை வழங்கியுள்ளன.
 
”சீன வணிக வங்கிகள் கொடுத்த கடனும் சீனா கொடுத்த கடன்தான். பாகிஸ்தானில் உள்ள தேசிய வங்கிகள் அரசால் நடத்தப்படுவது போல் சீனாவின் வணிக வங்கிகளும் அரசின் மேற்பார்வையில் இயங்குகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று பொருளாதார வல்லுநர் அம்மார் ஹபீப் கான் பிபிசி நியூஸிடம் பேசுகையில் தெரிவித்தார்.
 
 
பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவும் அதன் வணிக வங்கிகளும் சுமார் 30 சதவிகித பங்கை கொண்டுள்ளன. கடந்த நிதியாண்டின் கடன் திரும்பச்செலுத்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், சீனா மற்றும் சீனாவின் வணிக வங்கிகளுக்கு அதிகபட்ச கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
 
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், செளதி அரேபியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு வட்டி உட்பட 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை திரும்ப செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரப் பிரிவின் இணையதளத்தில் கடன் திருப்பிச் செலுத்தும் தரவுகள் தெரிவிக்கின்றன. செளதி அரேபியா, ஜப்பான், குவைத் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு திருப்பிச் செலுத்திய கடன் தொகை மிகவும் குறைவாக இருந்தது.
 
இதேபோல் பெரும்பாலும் சீன வணிக வங்கிகளை உள்ளடக்கிய வெளிநாட்டு வணிக வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களின் அளவும் அதிகமாக உள்ளது.
 
கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனக் கடன் அதிகரித்திருப்பது குறித்து பிபிசி ந்யூஸிடம் பேசிய பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் ஹபீஸ் பாஷா, ”சீனா மூன்று வகையான கடன்களை வழங்குகிறது. CPEC திட்டத்திற்காக சீனா கடன் வழங்கியது. இரண்டாவது கடன் சீன வணிக வங்கிகளால் வழங்கப்பட்டது. மூன்றாவது கடன் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானில் சீனா டெபாசிட் செய்த தொகை,” என்று கூறினார்.
 
”பாகிஸ்தானின் கடனில் சீனக் கடன்கள் அதிகரிப்பதற்குக் காரணம், சிபிஇசி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட கடன் மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய வைப்புத்தொகையாகும். இதன் காரணமாக பாகிஸ்தான் மீதான சீனாவின் மொத்த கடன் 25 முதல் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது,” என்று ஜேஎஸ் ரிசர்ச்சின் பொருளாதார விவகார நிபுணர் அம்ரீன் சொரானி குறிப்பிட்டார்.
 
”CPEC இன் பல்வேறு நோக்கங்களுக்காக சீனா மற்றும் அதன் வணிக வங்கிகளால் பாகிஸ்தானுக்கு கடன்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும் கடன்கள், சீனா மற்றும் அதன் வணிக வங்கிகளால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் கொடுக்கப்பட்டவை,” என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் மூத்த பத்திரிகையாளர் ஷாபாஸ் ராணா கூறினார்.
 
”CPEC இல் எரிசக்தி துறையில் கொடுக்கப்பட்ட கடன்கள் சுதந்திர மின் உற்பத்தியாளர்களுக்கு (IPRs) வழங்கப்பட்டன. மேலும் அவை பாகிஸ்தானின் மொத்தக் கடனில் சேர்க்கப்படவில்லை, இருப்பினும் சிக்கர் முல்தான் மோட்டார்வே, தாகோட் மோட்டார்வே போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
சீன கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசிய ஷாபாஸ் ராணா, ”சீனக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விஷயம் வரும்போது, வெளிநாட்டு நிதித் தேவைகளுக்காக பாகிஸ்தான் வாங்கிய கடன்கள்தான் பிரதானமாக உள்ளது. இவை வணிக வங்கிகளிடமிருந்து பெறப்பட்டவை ,”என்று கூறினார்.
 
"இந்த சீன கடனை திருப்பிச் செலுத்தும் காலம் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள். கடனின் முதிர்வு மிக விரைவில் வரும். இதன் காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் போன்ற நாடு சிக்கல்களை எதிர்கொள்கிறது,” என்றார் அவர்.
 
பாரிஸ் கிளப்பின் கீழ் கிடைக்கும் கடன்களின் திருப்பிச் செலுத்தும் காலம் நீண்டது. இது 15-20 ஆண்டுகள் முதல் 25-30 ஆண்டுகள் வரை இருக்கும். இருப்பினும் சீன வணிக வங்கிகளின் கடன் திருப்பிச்செலுத்தும் காலம் குறைவாக உள்ளது என்றும் ஷாபாஸ் ராணா கூறினார்.
 
சீன கடனை திருப்பிச் செலுத்துவதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை என்று இது தொடர்பாக அம்மார் ஹபீப் குறிப்பிட்டார். இவை ரோல் ஓவர் ஆகிவிடும் என்றார் அவர்.
 
இந்தக் கடன் ஓரிரு வருடங்களுக்கானது. இதை ரோல் ஓவர் செய்யவேண்டும் என்று இரு தரப்பினருக்கும் தெரியும். ஆகவே அது ரோல் ஓவர் ஆகிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
"திட்டங்களுக்காக வழங்கப்படும் கடன் காலம் நீண்டது. டெப்பாசிட் செய்யும் ஒரு செயல்முறை உள்ளது. பிற நாடுகளின் வைப்புத்தொகைகளை போலவே சீன வைப்புத்தொகைக்கும் இது பொருந்தும்,” என்று அம்ரின் சொரானி குறிப்பிட்டார்.
 
பாகிஸ்தானின் மொத்தக் கடனில் சீனக் கடனின் பங்கு அதிகரித்துள்ளது, அதாவது பாகிஸ்தான் இப்போது சீனாவுக்கு அதிகம் கடன்பட்டுள்ளது என்று நிதி நிபுணரும் முன்னாள் சிட்டி வங்கி வங்கியாளருமான யூசுப் நாசர் கூறுகிறார்.
 
”CPEC இன் கீழ் பெறப்பட்ட கடனை வெளிநாட்டு நாணய வடிவில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதேசமயம் இந்தத் திட்டங்களின் வருமானம் பாகிஸ்தான் ரூபாயில் உள்ளது. இது நிச்சயமாக வெளிநாட்டு கடன் திருப்பிச்செலுத்துதலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்றார் அவர்.
 
இதேபோல் சீனாவின் வணிகவங்கியின் கடன் வட்டி விகிதத்தைப் பார்த்தால், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் ஆகியவற்றின் கடனை விட இதன் வட்டி மிகவும் அதிகம். பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டிற்கு, பில்லியன் டாலர்களில் அரை சதவிகிதம் கூடுதல் வட்டி கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் யூசுப் கூறினார்.
 
பாகிஸ்தானின் நிலுவையில் உள்ள கடனில் சீனக் கடனின் விகிதம் கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்த வகையில் பாகிஸ்தான் மற்ற எந்த நாட்டையும் விட சீனாவுக்கு அதிகம் கடன்பட்டுள்ளது.
 
இந்தக் கடன்களை ரோல் ஓவர் செய்யும் வசதி பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமானது. இந்த ரோல் ஓவர்கள் நிகழ்கின்றன என்றும், திருப்பிச் செலுத்தும் காலம் முடிந்துவிட்தால் ரோல் ஓவர் செய்யப்படவேண்டும் என்று இருதரப்பினரும் புரிந்துகொள்வதால் இது தொடர்ந்து நடக்கிறது என்றும் அம்மார் ஹபீப் கூறினார்.
 
சீன கடன்களை ரோல் ஓவர் செய்யவேண்டும். மறுசீரமைப்பு செய்யக்கூடாது. மறுசீரமைப்பில் புதிய நிபந்தனைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் ரோல் ஓவரில் இது நடக்காது என்று இது தொடர்பாக அம்ரின் சொரானி குறிப்பிட்டார்.
 
சீனாவின் வங்கியிடமிருந்து பாகிஸ்தானுக்கு 70 கோடி டாலர் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
 
இது ஒரு வகையான ரோல் ஓவர். ஏனென்றால் பாகிஸ்தான் சில காலத்திற்கு முன்பு திருப்பிச் செலுத்திய அதே கடன் ரோல் ஓவராக மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
”பரஸ்பர கடன்களில் கடன் திருப்பிச்செலுத்தல் காலம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் சர்வதேச நிதி நிறுவனங்கள் இதை செய்வதில்லை,” என்று டாக்டர் பாஷா குறிப்பிட்டார்.
 
பாகிஸ்தான் ஏற்கனவே பாரிஸ் கிளப்பில் இருந்து கடன்களை ரீஷெட்யூல் செய்துள்ளது. அதை மீண்டும் செய்வது பொருத்தமானதாக இருக்காது. ஆனால் சீனாவின் இந்த வசதி பாகிஸ்தானுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
 
”பாகிஸ்தான் அதிகமாக சீனாவுக்குத்தான் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே உண்மையில் சீனா இந்த விஷயத்தில் அதிக அளவில் உதவ முடியும். கடன்களை மறுசீரமைப்பதற்காக சீனாவும், சர்வதேச நிதி அமைப்புகளும் சந்தித்து பேச வேண்டும். ஆனால் இதுவரை சீனாவிடமிருந்து அத்தகைய சமிக்ஞை கிடைக்கவில்லை,” என்று இது தொடர்பாக யூசுப் நாசர் குறிப்பிட்டார்.
 
”சீனாவின் கடன் இந்த நேரத்தில் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் பாகிஸ்தானின் கடன் மறுசீரமைப்பு, உலக வங்கி மற்றும் IMF உதவியுடன் செய்யப்படலாம். ஏனெனில் கடன் வழங்கும் நாடுகள் அல்லது அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவது புதிய விஷயம் அல்ல. முன்பு பாரிஸ் கிளப் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இதைச் செய்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்..
 
இலங்கை நிலை பாகிஸ்தானுக்கும் வருமா?
தற்போது மோசமான நிலைமையில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறும் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் ராமு மணிவண்ணன், சீனாவிடம் கடன் வாங்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்கிறார்.
 
"கடனுக்கான வட்டியும் வட்டிக்கான வட்டியும் செலுத்த வேண்டிய சூழலில்தான் பாகிஸ்தான் பொருளாதாரம் இன்றைக்கு உள்ளது. மேற்கத்திய நாடுகளிடமோ அல்லது ஐஎம்எஃப்பிடம் கடன் கேட்டு சென்றால் அவர்கள் அமைப்பு மாற்றம், அரசியல் நிபந்தனைகள், வங்கி முறையில் மாற்றம் என சில கடுமையான வழிமுறைகளை முன்வைப்பார்கள். அதை ஏற்கும் நிலையில் பாகிஸ்தானின் பொருளாதாரமோ அரசியல் சூழலோ இல்லை. எனவே சீனாவிடம் கடன் வாங்குவது நமக்கு அனுகூலமாக இருக்காது என்றும் அவர்களுக்குத் தெரியும்.
 
இந்த 700மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு என்னென்ன நிபந்தனைகளை சீனா முன்வைக்கிறது என்ற விவரங்கள் வெளியான பிறகுதான் இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும்," என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
 
தொடர்ந்து பேசிய அவர், "இலங்கை இந்த நிலையைச் சந்தித்ததற்கு சீனாவிடம் பெற்ற கடனும் முக்கிய காரணம். அதோடு, வார் எக்கானமி எனப்படும் போர் பொருளாதாரமும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தானும் அதே காரணம் பொருந்தும். ஏனெனில், பொருளாதாரத்தில் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தானிடம் தெளிவு இல்லை. ராணுவ மேற்பார்வையில் அரசு நடைபெறும் போது ராணுவத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில்தான் அந்த நாட்டின் பொருளாதாரம் இருக்கும்," என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய உண்மையான நட்பு - சினோஜ் கட்டுரைகள்