Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் மேலாண்மை: ‘கேப்சூல்’ தண்ணீர் கொடுக்க நேரிடும், ஆப்பிரிக்கா நிலைதான் தமிழகத்திற்கு ஏற்படும் - எச்சரித்த நீதிபதிகள்

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (13:14 IST)
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும்'


 
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை எச்சரித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலவசங்களைத் தவிர்த்து அணைகள் கட்ட வலியுறுத்தியுள்ளனர்.
 
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது வெள்ளநீர் வீணாகக் கடலில் கலந்தது. இதையடுத்து சென்னையில் நவீன நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தக் கோரி வழக்கறிஞர் விபிஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


 
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ''வருவாய் ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என உள்ள நீர்பிடிப்புப் பகுதியை அதிகரிப்பதன் மூலம் வெள்ளநீர் வீணாகக் கடலுக்கு செல்வதைத் தடுக்க முடியும். ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வெள்ள சேதமும் கட்டுப்படுத்தப்படும்'' என வாதிட்டார்.
 
பொதுப்பணித்துறை சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10 ஆயிரத்து 347 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 4 ஆயிரத்து 161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு ரூ.6.18 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், அடையாறு ஆற்றின் ஓரங்கள் ரூ.50 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


 
இதேபோல கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், மேலும் 56 பணிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க ரூ.100 கோடி செலவில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்க வேண்டும்.
 
அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவுநீர் கால் வாய்களை 6 மாதத்துக்குள் சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்பணிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து, கடமை தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தண்ணீரை கிடைக்கும் போது வீணாக்கிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்துக்கும் ஏற்படும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களி்ல் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும். மக்களின் வரிப்பணத்தை இலவசங்களுக்குப் பயன்படுத்துவதை தவிர்த்து, கூடுதலாக அணைகள் கட்டுவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments