கொழும்பு நகரின் முக்கியச் சாலைகளில் கையில் கம்புகள், கம்பிகள் போன்றவற்றுடன் ஏராளமானோர் கூடியிருப்பதை திங்கள்கிழமை மதியம் முதலே பார்க்க முடிந்தது.
வன்முறை தொடங்கிய தருணத்தில் அலரி மாளிகை, காலி முகத்திடல், யூனியன் பிளேஸ், ஸ்லேவ் ஐலேண்ட் என்று அழைக்கப்படும் கொம்பனித் தெரு, கங்காராமா மகாவிகாரம் ஆகிய பகுதிகளில் ஆவேசமடைந்த கும்பல்கள் குழுமியிருந்தன.
அந்தத் தருணத்தில் பிபிசி தமிழ் குழு காலி முகத்திடலுக்கு உள்ளேயும் வெளியேயும் செய்தி சேகரித்துக் கொண்டிருந்து.
அலரி மாளிகை அமைந்திருக்கும் சாலையில் முழக்கங்களை எழுப்பியபடி பலர் கம்புகளுடன் வாகனங்களை மறித்துக் கொண்டிருந்தனர்.
அரசுத் தரப்பு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலை பல பகுதிகளில் காண முடிந்தது. சிலர் ஒன்று சேர்ந்து வேறு சிலரை விரட்டிச் சென்று தாக்கினர்.
பல பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தலையிலும் முகத்திலும் ரத்தக் காயங்களைக் கொண்டவர்களையும் காண நேர்ந்தது.
ஒரு காரை பலர் சேர்ந்து கங்காராமா மகாவிகாரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஏரிக்குள் தள்ளினார்கள். ஒரு பேருந்தையும் தள்ளுவதற்கு முயற்சி செய்தார்கள். சுற்றிலும் காவல்துறையினர் இருந்தபோதும் அவர்களால் ஏதும் செய்ய இயலாத அளவுக்கு பெரும்கூட்டம் அந்தப் பகுதியில் ஆவேசமாக நின்று கொண்டிருந்தது.
கம்புகளை வைத்திருந்தவர்கள், சாலையில் செல்லும் கார்களை மடக்கி, யார் என்று விசாரித்து அறிந்த பிறகே தொடர்ந்து போக அனுமதித்தனர். நாங்கள் சென்ற வாகனத்துக்கும் அத்தகைய சோதனை நடத்தப்பட்டது. வாகனத்துக்குள் இருந்தபடியே புகைப்படம் எடுப்பதையோ, வாகனத்தைவிட்டு இறங்குவதையோ அவர்கள் அனுமதிக்கவில்லை.
அதற்கு சற்றுத் தொலைவில் இருக்கும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தைச் சுற்றி காவல்துறையினரும், இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திய ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது போராட்டங்கள் நடைபெறும் காலி முகத்திடலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது.
காலி முகத்திடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு புகுந்தவர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தே இந்த வன்முறையானது கொழும்பு நகர் மாத்திரமல்லாமல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
வன்முறை எப்படித் தொடங்கியது?
கொழும்புவில் இப்போது ஏற்பட்டிருக்கும் பதற்றத்துக்கான தொடக்கப்புள்ளி திங்கள்கிழமை காலையிலேயே வைக்கப்பட்டு விட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போகிறார் என்ற தகவல் நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே உலவி வந்தாலும், திங்கள்கிழமையன்று அது அதிகாரப்பூர்வமான வட்டாரங்களில் இருந்து கசியத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமரின் அதிகாரப்பூர்வமான ஊடகத் தொடர்பாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகழைக்கூறும் வகையிலான பல்வேறு காணொளிகளை வெளியிட்டிருந்தார்கள்.
திங்கள்கிழமையன்று காலையில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி அவருக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அலரி மாளிகைக்கு வெளியே வந்து அரசுக்கு எதிரான போராட்டம் நடக்கும் காலி முகத்திடல் பகுதிக்கு தாங்கள் செல்லப் போவதாக அறிவித்து அதை நோக்கிச் சென்றனர். இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு சுமார் ஒரு கிலோ மீட்டர்.
வழியிலேயே அவர்களைத் தடுப்பதற்கு காவல்துறையினர் முயன்றாலும், தடுப்புகளையும் தாண்டி அவர்கள் போராட்டம் நடக்கும் காலி முகத்திடல் பகுதிக்கு வந்து அங்கு போராட்டக்காரர்கள் அமைத்திருக்கும் கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அமைத்திருக்கும் சிகிச்சை முகாமும் தாக்குதலுக்கு இலக்கானது. அடித்து உடைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தை நேரில் பார்க்க முடிந்தது. அரசுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்ட இடம், இளைஞர்கள் தங்குவதற்கான கூடாரங்கள் போன்றவையும் சேதப்படுத்தப்பட்டன.
சிறுவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த ஒரு கூடாரம் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தருணத்தில் இருதரப்பு மோதல் ஏற்பட்டு போராட்டக்காரர்களும் அலரி மாளிகையில் இருந்து வந்தவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். தடியடி நடத்தினார்கள்.
அலரி மாளிகையில் இருந்து வந்தவர்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விரட்டித் தாக்கினர். சுமார் இரண்டு மணி நேரம் வரை காலி முகத்திடல் பகுதி வன்முறை களமாகக் காட்சியளித்தது.
அதன் பிறகு அந்தப் பகுதியில் பதற்றம் சற்றுத் தணிந்தது போலத் தெரிந்தாலும், கொழும்பு நகரின் பிற பகுதிகளிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்தது.
அந்த நேரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய தகவல் வெளியானது. ஆயினும் பதற்றத்தை தணிக்க அது போதுமானதாக இல்லை.
ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலரி மாளிகையும் தப்பவில்லை.