Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் தினம்: காதல் மறுக்கப்படும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

காதல் தினம்: காதல் மறுக்கப்படும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:09 IST)
இது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது.

யாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் பட்டியல் உங்களுக்கானதுதான்.

நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் குறைந்தது ஒரு முறையாவது, உடலும் மனமும் ஒரு சேர நடுங்க காதலை யாரிடமாவது சொல்லியிருப்போம்.

காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தக் காதல் உறவு நெடுங்கால பந்தமாக வாய்க்கப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள்தான். ஆனால், எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை.

பெரும்பாலானோரின் காதல் ரோஜாக்கள் உடனடியாக உதிர்ந்து விடுகின்றன.

காதல் உண்டாக காரணம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், காதல் மறுக்கப்பட காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம். இது நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

1. 'நான் உன்னை அப்படிப் பார்க்கவில்லை'

இந்த ஒரு வாசகம் பல இதயங்களை சுக்குநூறாக உடைத்திருக்கும். இதற்குள் இருக்கும் பொருளை கண்டறிய முற்பட்ட பலருக்கும் எதிர்மறையான பதிலே கிடைத்திருக்கும்.

'அப்படியானால் வருங்காலத்தில் என்னைக் காதல் உணர்வுடன் பார்க்க வாய்ப்புள்ளதா?' என்ற கேள்விக்கு 'பெரும்பாலும் கிடைத்த பதில் 'எனக்குத் தெரியாது' என்பதே.

ஒருவேளை 'அதற்கு வாய்ப்பு இல்லை' என்ற நிச்சயமான பதில் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ள நபரை மேற்கொண்டு வற்புறுத்த முடியாது.
காதல் கட்டாயப்படுத்தி வரவழைப்பது இல்லைதானே?

2. 'நாம் நல்ல நண்பர்கள் மட்டுமே'

இந்த வாசகம் உங்கள் பழைய காயங்களை நினைவூட்டுகிறதா? ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக காஃபி குடித்து, நீண்ட இரவுகளில் உங்களுடன் செல்பேசியில் பேசியே நேரத்தைப் போக்கிய நபர் உங்கள் மீது காதல் இல்லை நட்பு மட்டுமே உள்ளது என்று சொன்னால், கொஞ்சம் நம்பிக்கையுடன் நீங்கள் மேலும் முயற்சி செய்யலாம்.

இந்தச் சூழலில், உங்கள் காதல் மீதான நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கலாம். ஆனால், காதலை வெளிப்படுத்தி மறுக்கப்பட்டபின், அந்த நட்பு சிக்கல் இல்லாமல் நீடிக்க வாய்ப்புகள் சற்று குறைவுதான்.

3. 'எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு'

பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் தந்தையும் சகோதரர்களும் அவர்கள் உலகின் முக்கியமான ஓர் அங்கம். இதைக் காரணம் காட்டி உங்கள் காதலை மறுத்தால், அந்த மறுப்புக்குப் பின் நீண்ட யோசனை உண்டு எனலாம்.

பெண்களுக்கு அவர்களின் அம்மாதான் உலகின் மிகவும் முக்கியமான பெண்ணாக இருக்கலாம். ஆனால், அவர்களின் எண்ண ஓட்டத்தில் அதிக தாக்கம் வகிப்பவர் அப்பாவாகவே பெரும்பாலும் இருப்பார்.

அவர்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் அறிமுகமானவராக இருந்தால் அவர்கள் மனதை மாற்ற நீங்கள் முயற்சி செய்யலாம்.

4. 'நான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலிக்கிறேன்'

தொடக்கத்திலேயே உங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதில் இது. பெரும்பாலான நேரங்களில் இது உண்மையான பதிலாகவே இருக்கும்.
webdunia

ஆனால், எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருப்பது உங்கள் முடிவைப் பொறுத்தது.

காரணம் ஒரு இடத்தில் காயம்பட்டால், இன்னொரு இடத்தில் ஆறுதல் தேடுவது மனித இயல்பு.

5. 'எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை'

இது சற்று ஆபத்தான பதில்தான். அதற்குக் காரணம் பழைய காயங்களாக இருக்கலாம். அந்தக் காயத்தைத் தற்காலிகமானதாக மாற்றுவது உங்கள் திறமை.

இப்படிப்பட்ட நபரிடம் தொடர்ந்து முயற்சித்து அவர்களின் காதல் உணர்வுகளை மீண்டும் தூண்டுவது உங்கள் தனிப்பட்ட சாமர்த்தியம்.

6. 'உனக்கு என்னைவிட சிறந்த நபர் கிடைப்பார்'

இது ஒரு மொன்னையான காரணம். இதற்குப் பொருள் அந்த நபர் உங்களுடன் விவாதிக்கவோ மேற்கொண்டு பேசவோ தயாராக இல்லை என்பதுதான்.

நான் காதலிக்க தகுந்த ஆளில்லை என்பதை எந்த நபராவது வெளிப்படையாக முழு மனதுடன் ஒப்புக்கொள்வாரா?

நம் மீது அன்பை வெளிப்படுத்தும் ஒருவரை மறுக்க மனித மனதுக்கு விருப்பம் இருக்குமா? பின்பு ஏன் இந்தப் பதிலைத் தருகிறார்கள்?

இதன் பின் இருக்கும் உண்மை, உங்களைவிடச் சிறந்த நபர் ஒருவரை நீங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ள நபர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்பதே.

7. சொல்லப்படாத காதல்

காதலர் தினங்கள் வரலாம்; போகலாம் . ஆனால், உணர்வுகள் நீடித்திருப்பவை. வேறு ஒருவர் மீதான காதலை வெளிப்படுத்தாமலேயே அந்த நபர் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

நீங்கள் காதலைச் சொல்லும்போது அவர்கள் பழைய நினைவுகள் தூண்டப்படலாம்; முந்தைய காயங்களின் வலி மீண்டும் உண்டாகலாம்.

இந்த நிலையில், வருத்தப்படுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

மேற்கண்டவை சில பொதுவான காரணங்களே. நபருக்கு நபர், காதலுக்குக் காதல் காரணங்கள் மாறுபடலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்றியை பார்த்து யானை நகர்ந்து கொண்டதாம்! – குட்டி ஸ்டோரி சொன்ன ஸ்டாலின்!