Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேச தேர்தல்: 'முஸ்லிம்கள் ’பலிகடாவாக நடத்தப்படுகிறோம்'!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:18 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில் நகரமான மதுராவில், மூன்று முஸ்லிம் சகோதரர்கள் நடத்தும் பிரபலமான உணவு விடுதியை இந்து விழிப்புணர்வுக் குழு ஒன்று தாக்கியது.
 
இந்து கடவுளின் பெயரால் ஆதாயம் அடைவதாக குற்றம் சாட்டி, தங்களின் சுவரொட்டிகள் மற்றும் பலகைகளைக் கிழித்து எறிந்ததாக ஸ்ரீநாத் தோசா கார்னரை நடத்திய சகோதரர்களில் ஒருவரான அபித் கூறினார்.
 
அதுமட்டுமன்றி "இந்துக்கள் இங்கே சாப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் உங்களை இந்துக்கள் என்று நினைக்கிறார்கள்," என்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சொன்னதாகவும் அவர் கூறினார்.
இந்த சகோதரர்கள் நடத்தும் உணவு விடுதி, கிருஷ்ணர் கோயிலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், எலக்ட்ரானிக் சந்தையில் அமைந்துள்ளது.' ஸ்ரீநாத்' என்பது கிருஷ்ணரின் மற்றொரு பெயர். மேலும் மதுரா, கிருஷ்ணர் பிறந்த இடம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
 
தற்போது அமெரிக்கன் தோசை கார்னர் என்று அழைக்கப்படும் இந்த உணவு விடுதி தவிர, கோயிலுக்கு அருகேயுள்ள ஒவ்வொரு உணவு விடுதிக்கும் கடவுள் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.
 
தாக்குதல் வீடியோ வைரலானதை அடுத்து, அபித் காவல்துறையில் புகார் செய்தார். அதன் விளைவாக தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்போது பேசும் அபித்,"எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று நினைப்பதால்" அதை ஒரு சிறு சம்பவமாக காட்ட முயற்சிக்கிறார் என்று ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் விளக்குகிறார்.
 
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த 2014இல் இருந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. 2017இல் பாஜக உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற, துறவியாகி காவி உடை அணிந்த யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராகவும் பாஜக நியமித்தது.
 
வெற்றி பெற்ற சில நாட்களுக்குள், உத்தரபிரதேச கிராமம் ஒன்று முஸ்லிம்களை வெளியேறச் சொல்லி சுவரொட்டிகளை ஒட்டியது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றிய முதல் மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்து பெண்களுடன் மதம் தாண்டி உறவு ஏற்படுத்திக்கொள்ளும் முஸ்லிம் ஆண்களை துன்புறுத்தவும் சிறையில் அடைக்கவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும் வரை, சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்கள் தாக்கப்பட்டதோடு அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.
 
பெருந்தொற்று காலத்தில் முஸ்லிம் ஆண்களை "கொரோனா ஜிஹாத்" அதாவது வைரஸை பரப்புகிறவர்கள் என்று சில பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
 
உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 20 சதவிகிதமாக இருக்கும் முஸ்லிம்கள் மீது இத்தகைய பாகுபாடு காட்டப்படுகிறது. இந்த சூழலில், புதிய அரசைத் தேர்ந்தெடுக்க மாநிலம் வாக்களித்துக்கொண்டிருக்கும் நிலையில், ​​பாஜகவின் இந்து தேசியவாத ஆட்சியின் கீழ், தாங்கள் "இரண்டாம் தரக் குடிமக்களாக" ஆகிவிட்டதாக இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிபிசியிடம் கூறினர்.
 
"ஆதித்யநாத், ஒரு பாஜக அரசியல்வாதியைப் போல் நடந்துகொள்கிறார், ஆட்சியாளர் போல் அல்ல" என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற இறையியல் பேராசிரியரான முஃப்தி ஜாஹித் அலி கான், குறிப்பிட்டார்.
 
மேலும், "அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, முஸ்லிம்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். எங்கள் குழந்தைகள் வெளியே செல்லும் போதெல்லாம், எங்கள் வீட்டுப்பெண்கள் அவர்கள் பாதுகாப்பாக திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்." என்றும் தெரிவித்தார்.
 
அதேசமயம் "உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறார்கள் என்பது உண்மையல்ல" என்று கூறுகிறார் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக துணைத் தலைவருமான விஜய் பதக்.
 
" சாதி, மத அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதில்லை. இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் எங்களுக்கு வாக்களிப்பார்கள்," என்று அவர் கூறினார்.
 
ஆனால் யோகி மற்றும் அவரது பல கட்சித் தலைவர்கள் சமீபத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், "முஸ்லிம்கள் தங்கள் தொப்பிக்கு பதிலாக இந்துக்கள் பயன்படுத்தும் குங்குமம் அணிவதை உறுதிசெய்வேன் என்று ஒரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கூறினார். மசூதிகள், இஸ்லாமிய மெளலவிகள் மீது தாக்குதல் நடத்த கடந்த மாதம் சில இந்து மதத் தலைவர்கள் அழைப்பும் விடுத்தனர்.
 
நாங்கள் இந்துக்களுடன் வேலை செய்கிறோம், அவர்களுடன் வணிகம் செய்கிறோம். குடும்பங்களில் நடக்கும் திருமணங்களில் பரஸ்பரம் கலந்து கொள்கிறோம். ஆனால் 'வெறுப்பு அரசியல் அதிகரித்து வருகிறது'. தேர்தல் நெருங்கும் போதெல்லாம் இது தீவிரமடைகிறது," என்று எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜமிருல்லா கான், குறிப்பிட்டார்.
 
"நாங்கள் பலிகடா போல இருக்கிறோம். நன்கு உணவளித்து, கொழுக்க வைக்கப்பட்டு, பின்னர் கட்சிக்காக படுகொலை செய்யப்படுகிறோம். அதாவது, அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெற முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுகிறார்கள். பின் தேர்தல் முடிந்ததும், எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்பிச்செல்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
 
இந்தியாவில் முஸ்லிம்கள் ஏழ்மையான மதக் குழுவாக உள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் கிட்டத்தட்ட 46% பேர் முறைசாரா துறையில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். உ.பி.யும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
இதற்கிடையில், கொரோனா பெருந்தொற்று, அரசு கொள்கைகளுடன் இணைந்து, தங்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
பாரம்பரியமாக இஸ்லாமியர்கள் நடத்தி வந்த இறைச்சிக் கூடங்கள் சட்டவிரோதமாக இயங்குவதாகக் கூறி ஆதித்யநாத் அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் அத்தகைய 150 இறைச்சிக் கூடங்களை மூடியுள்ளது. பல மாவட்டங்களில் திறந்திருக்கும் இறைச்சிக்கூடங்களும், இந்து பண்டிகைகளின் போது நாட்கணக்கில் மூடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
 
இது இறைச்சிக் கடைக்காரர்களை கடுமையாக பாதித்துள்ளது என்றும் பல நுகர்வோர் தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் மதுராவில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளர் ஜாகிர் ஹுசைன் கூறுகிறார்.
 
கடந்த எட்டு ஆண்டுகளாக, ஹுசைன் மற்றும் அவரது சகோதரர்கள், மஜீத் உணவகத்தை நடத்தி வருகின்றனர். இது கோழி பிரியாணிக்கு பிரபலமானது. ஒரு நாளைக்கு இங்கே 500 சாப்பாடுகள் விற்பனையாகும்.
 
ஆனால் செப்டம்பரில் கிருஷ்ணர் கோவிலைச் சுற்றி 10 சதுர கிமீ (சுமார் 4 சதுர மைல்) சுற்றுவட்டாரத்தில் இறைச்சி உணவைத் தடைசெய்யும் உத்தரவை ஆதித்யநாத் வெளியிட்டார். இந்தக்கோவில் இருக்கும் பகுதி, ஒரு மசூதியும் பல முஸ்லிம் குடும்பங்களும் உள்ள பகுதியும் ஆகும்..
 
ஆனால், ஒரே இரவில், மஜீத்தின் உணவுப் பட்டியலில் இருந்து பல பிரபல உணவு வகைகள் மறைந்துவிட்டன. அதே போல பெரும்பாலான வாடிக்கையாளர்களும் காணாமல் போய்விட்டனர்.
 
"இறைச்சி, முட்டைகளை விற்கும் டஜன் கணக்கான உணவகங்கள், சுமார் நூறு கடைகள் மூடப்பட்டன. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்" என்று ஹுசைன் கூறினார்.
 
 
இந்துக்கள் அசைவம் விற்கிறார்கள்:
"முஸ்லிம்களாகிய எங்களை வியாபாரத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இது செய்யப்பட்டது . கடந்த சில மாதங்களில் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு வெளியே இந்துக்களால் நடத்தப்படும் பல அசைவ உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன,"என்கிறார் அவரது சகோதரர் ஷாகீர்.
 
இலவச உணவு கேட்ட இந்து தேசியவாத கும்பல்
சகோதரர்கள் ஒரு புதிய உணவகத்தைத் திறக்க பாதுகாப்பான இடத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தனர். ஆனால் மூன்றாவது நாளே அவர்கள் இந்து தேசியவாதி கும்பலால் தாக்கப்பட்டனர்.
 
"அவர்கள் எங்களிடம் இலவச உணவு வழங்குமாறும், ஒவ்வொரு மாதமும் மாமூல் வழங்குமாறும் கேட்டனர். நாங்கள் மறுத்ததால், அவர்கள் உணவகத்தை சூறையாடி எங்களைத் தாக்கினர்," என்று ஜாகீர் ஹூசைன் கூறினார், சகோதரர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
 
"நான் மூன்று பற்களை இழந்தேன். என் தாடை உடைந்தது. நான் ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன். என் சகோதரர், உறவினர்கள் காயமடைந்தனர்," என்று அவர் கூறினார்.
 
ஹுசைன் சகோதரர்கள் தங்களை மாட்டிறைச்சி உண்ணும்படி வற்புறுத்த முயன்றதால் சண்டை தொடங்கியதாகக் கூறி, அவர்களைத் தாக்கியவர்கள் எதிர் புகார் பதிவு செய்தனர். இந்துக்கள் பசுவை புனிதமாக கருதுகின்றனர். உ.பி உட்பட பல மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஹுசைன் சகோதரர்கள் மற்றும் பல உணவக உரிமையாளர்களும், தடையை ரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
பா.ஜ.க, ஆபத்தான விளையாட்டை ஆடுவதாக, ஷாகீர் ஹூசைன் கூறுகிறார். "மக்கள் பயப்படும் அளவுக்கு வெறுப்பு பரவியுள்ளது. இந்துக்கள் முஸ்லிம்களைப்பார்த்து அஞ்சுகிறார்கள், முஸ்லிம்கள் இந்துக்களுக்கு பயப்படுகிறார்கள்."என்று அவர் குறிப்பிட்டார்.
 
"பாஜக தலைவர்கள், சாமியார்களின் வெறுப்பைத்தூண்டும் பேச்சுக்கள், இனி வெற்றுப் பேச்சுக்கள் மட்டும் அல்ல. இந்த வெறுப்பு பேச்சு முஸ்லிம்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது," என்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை ஆவணப்படுத்தும் பத்திரிக்கையாளர் அலிஷான் ஜாஃப்ரி குறிப்பிட்டார்.
 
"முஸ்லிம் என்ற அடையாளம், உ.பி. மாநிலத்திலும் இந்தியா முழுவதிலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது," என்றார் அவர்.
 
"முஸ்லிம்கள் என்ன உடுத்துகிறார்கள், சாப்பிடுகிறார்கள் அல்லது அவர்கள் யாரை திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதைப் பார்த்து புண்படும் உரிமை இந்துக்களுக்கு உண்டு என்பது இப்போது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், இது முஸ்லிம்களின் கலாசாரத்தை மெதுவாக அழிக்கிறது," என்று ஜாஃப்ரி சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments